Published : 20 Sep 2013 12:47 PM
Last Updated : 20 Sep 2013 12:47 PM

பிரதமர் ஆவாரா ஜெயலலிதா? - பிருந்தா காரத் பேட்டி

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில், பிரதமர் வேட்பாளர் என்பது கிடையாது. மோடி பிரதமர் என்று சொல்வது, ஆர்எஸ்எஸ் விருப்பம். மோடியை அறிவித்த பிறகு, மதவாத சக்திகளுக்கு வலு கூடியிருக்கிறது. மதவாத அரசியலை இந்திய மக்கள் ஏற்கெனவே நிராகரித்துள்ளனர். மோடியையும் நிராகரிப்பார்கள்.

பிரதமர் ஜெயலலிதாவா?

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறான அரசியல் சூழல் உள்ளது.

அங்குள்ள அரசியல் நிலை, காங்கிரஸ், பா.ஜ.க., ஆகியவற்றுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஆகியவற்றை, கவனத்தில் கொண்டு, விரிவான மதச்சார்பற்ற, ஜனநாயக அடிப்படையில் இடதுசாரிகள் உரிய முறையில் தேர்தல் வியூகத்தை வகுப்பார்கள். எந்தெந்த மாநிலத்தில், எந்தெந்த கட்சியுடன் அணி சேர்வார்கள் என்று, இப்போதே சொல்வது சாத்தியமில்லை.

ஜெயலலிதா பிரதமர் தகுதிக்கு தகுதியானவர் என்று சொல்ல, இது சரியான காலம் இல்லை. நாளைய அரசியல் சூழ்நிலையை கணிக்க முடியாத நிலையில், இதைப்பற்றி எப்படி கருத்து சொல்ல முடியும்?

உணவு பாதுகாப்புச் சட்டம், தமிழக மக்களை கடுமையாக பாதிக்கும். உணவின் அளவு குறையும், உணவு பாதுகாப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறையும், விலையும் அதிகரிக்கும். தமிழகம் உள்ளிட்ட பத்து மாநிலங்களில், இந்த பாதிப்பு இருக்கும்.

ஒருபக்கம் பணக்காரர்களுக்கு சலுகையாக ரூ.5 லட்சம் கோடியை கொடுத்துவிட்டு, மறுபக்கம் சிக்கன நடவடிக்கை பற்றி மத்திய அரசு பேசுவது வேடிக்கையானது. அன்னிய மூலதனம், புதிய தொழில்நுட்பங்களை, இந்தியாவிற்கு கொண்டு வரவில்லை. மாறாக நம்மிடம் இருக்கும் நிறுவனங்களை வாங்கி, லாபத்தை எடுத்துச் செல்கின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஒப்பிடும்போது, அதிமுக பல விஷயங்களில் சரியான முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக என்எல்சி பங்கு விற்பனை பிரச்சினையில், அதிமுக சரியான நிலை எடுத்தது.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலும், தமிழக மக்களின் உணவு பாதுகாப்புக்கு ஏற்ற, சரியான நிலையை எடுத்தது எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x