Published : 19 Oct 2013 10:08 AM
Last Updated : 19 Oct 2013 10:08 AM
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் இருக்கும் நிலையில், குடிநீரில் துணி துவைப்பதையும் குளிப்பதையும் குடிநீர் வாரியம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி.
இப்போது வெறும் 1,964 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் 3,227 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
ஏரிகளில் நீர்இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால் சென்னை மாநகரில் சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், புறநகர் பகுதிகளுக்கு 68 கோடி லிட்டர் விநியோகிக்கப்படுகிறது. ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மக்களை குடிநீர் வாரியம் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தெருக்களில் உள்ள குடிநீர் குழாயில் துணி துவைப்பதும், குழந்தைகளை குளிக்க வைப்பதும், பாத்திரங்கள் கழுவுவதும் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் சிக்கனம் குறித்து வலியுறுத்தும் குடிநீர் வாரியம், குடிநீரில் துணி துவைப்பதையும், குளிப்பதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலையில் உள்ள தெருக்குழாயில் துணிகள் துவைப்பதை பெண்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஓட்டேரி பிரிக்ளின் சாலையிலும் இதேநிலைதான். பெரும்பாலான தெருக்குழாய்களில் குடிநீர் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. பல இடங்களில் குழாய்கள் உடைந்திருப்பதாலும் குடிநீர் வீணாகிறது.
ஏரிகளில் நீர்இருப்பு குறைந்து கொண்டே போவதால், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. பருவமழை கைகொடுக்காவிட்டால், குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகிவிடும். நிலைமை இப்படி இருக்க, மக்களின் பொறுப்பற்ற செயலால் குடிநீர் வீணாவதைத் தடுக்க குடிநீர் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.
கிருஷ்ணா நீர்
தெலங்கானா போராட்டம் காரணமாக போராட்டக்காரர்கள் கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் மணல் மூட்டைகளைப் போட்டு அடைப்பு ஏற்படுத்தியதால், கிருஷ்ணா நீர் வரத்தும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, வினாடிக்கு 59 கனஅடி மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு இந்த தண்ணீர்தான் முக்கிய நீராதாரமாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT