Published : 28 Jan 2017 11:32 AM
Last Updated : 28 Jan 2017 11:32 AM
திருப்பூரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் காங்கயம் ஊத்துக்குளி சாலையில் வலதுபுறம் அமைந்துள்ளது கத்தாங்கண்ணி கிராமம்.
இதற்கு மேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பழநாயக்கன்பாளையம். இந்த ஊர் தொடங்கும் முன்பே ஊர்க்கோடி மரத்தடியில் ஏராளமான கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளன.
இறந்தவர்களுக்கு சமாதி எழுப்பி, அதில் கல்வெட்டுகள் பதித்து, பராமரித்து வருவதும், இறந்தவரின் குடும்பத்தினர் ஆண்டுதோறும் சமாதியில் கூடி, திதி கொடுப்பது, நினைவஞ்சலி செலுத்துவதும் தமிழக கிராமங்களில் நிலவும் வழக்கம்.
ஆனால், பழநாயக்கன் பாளையத்தில் மரத்தடியில் உள்ள கல்வெட்டுகள் சமாதிகள் அல்ல. இவை, இறந்தவர்களைக் குறிக்கும் கல்வெட்டுப் பலகைகள்தான் என்றாலும், அவை எல்லாம் சமாதிகள் அல்ல; கருமாதி சடங்குக்கு வைக்கப்பட்டவை.
இந்த ஊரில் யாராவது இறந்துவிட்டாலோ, இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியூருக்குபோய் தங்கி, பின்னர் அங்கு இறந்துவிட்டாலோ, அவர்கள் நினைவாக கல்வெட்டுப் பலகை பொறித்து, இங்கே கொண்டுவைக்கின்றனர். இது பல ஆண்டுகளாக உள்ள நடைமுறை. இங்குள்ள 2 மரங்களின் கீழும் நூற்றுக்கணக்கில் அடிக்கற்கள் பலகை நெருக்கமாக பதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழநாயக்கன் பாளையம் மக்கள் கூறியதாவது: இங்கு பழநாயக்கன்பாளையம், அருகம்பாளையம் என 2 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பெரும்பான்மையாக குறிப்பிட்ட 2 பிரிவுகளைச் சார்ந்தவர்கள் வாழ்கிறோம். எங்களுக்கு பூர்வீகமே இந்த ஊர்தான். எங்கள் வீடுகளில் யாராவது இறந்துவிட்டால், 3-ம் நாள் கருமாதி சடங்குகள் செய்யும் நாளன்று, இறந்தவர் பெயரில் கல்வெட்டு பொறித்து ஊர்க்கோடியில் உள்ள மரத்தடியில் கொண்டுவந்து வைத்து, சடங்குகள் செய்வது காலங்காலமாக நடைமுறையில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக பிழைப்புக்காக வேறு ஊருக்குச் செல்வோர் அதிகரித்து விட்டனர்.
அப்படி செல்பவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், அவர்களில் யாராவது இறந்துவிட்டால், அங்கேயே இறுதிச்சடங்கு முடித்து, கருமாதி நாளன்று இப்படி கல்வெட்டு வைப்பது வழக்கம். இந்த 2 மரத்தடிகளில் குறிப்பிட்ட பகுதிகள் அருகம்பாளையம், பழநாயக்கன்பாளையத்துக்கு விடப்பட்டுள்ளன.
இந்த இடத்தில் கல்வெட்டு வைப்போர், நேரம் கிடைக்கும்போது இங்கு வந்து மூத்தோர் வழிபாடு செய்வதும் வழக்கம். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு ஊர்களில் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊரைச் விட்டு வெளியூருக்குச் சென்றாலும், அவர்கள் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால், கல்வெட்டு செய்து, அந்தந்த ஊர்களில் கொண்டுசென்று வைப்பதை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT