Last Updated : 21 Aug, 2016 02:18 PM

 

Published : 21 Aug 2016 02:18 PM
Last Updated : 21 Aug 2016 02:18 PM

வீரவரலாறு கொண்ட பாஞ்சாலங்குறிச்சியில் கம்பீரம் இழக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை: பராமரிக்க ஆளில்லை; சுற்றுலாத்துறை பாராமுகம்

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை முறையான பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது.

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் பாஞ்சாலங்குறிச்சி. ஆனால், அதன் வீரவரலாறு மிகப்பெரியது. தென்னகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அவதரித்த வீரபூமி அது.

புகழ்பாடி நிற்கிறது

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் கைது செய்யப்பட்ட கட்டபொம்மன், பின்னர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்த கட்டபொம்மனின் கோட்டையும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் நாட்டின் விடுதலை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், அந்த இடத்தில் கடந்த 1974-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் முயற்சியால் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை புதிதாக கட்டப்பட்டது. இந்த கோட்டை இன்றளவும் கட்டபொம்மனின் புகழ்பாடி நிற்கிறது.

ஒரே ஒரு ஊழியர்

1977-ம் ஆண்டு முதல் இக்கோட்டை சுற்றுலாத்துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகின்றனர். கோட்டையை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.2-ம், சிறியவர்களுக்கு ரூ.1-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால், கோட்டை முறையாக பராமரிக்கப்படாததால் பாழடைந்து வருகிறது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத்துறை சார்பில் 18 பணியாளர்கள் வேலை செய்தனர். ஆனால், தற்போது ஒருவர் மட்டுமே வேலை செய்கிறார். அவரும் தோட்டக்காரர் தான். சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பது, உள்ளே உள்ள பராமரிப்பு பணி என, அனைத்தையும் அவர் ஒருவரே கவனிக்கிறார். ஒரு காலத்தில் பச்சை பசேல் என, பசுமையாக காட்சியளித்த கோட்டை வளாகம் தற்போது செடி, கொடிகள், மரங்கள் அனைத்தும் காய்ந்து பாலைவனம் போல் இருக்கிறது.

கோட்டை சுவரில் விரிசல்

கோட்டை வளாகத்தில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், கோட்டையை சுற்றியுள்ள நடைபாதைகள், நுழைவு வாயிலில் உள்ள பெயர் பலகை உள்ளிட்ட அனைத்தும் உடைந்து உருக்குலைந்து காணப்படுகின்றன.

தண்ணீர் வசதியுடன் கழிப் பறைகள் இருந்தும், அதனை பராமரிக்க போதுமான ஆட்கள் இல்லாததால் பூட்டியே கிடக்கின்றன. இதுமட்டுமல்ல கோட்டையில் உள்ள சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல்கள் காணப்படுகின்றன. சில பகுதிகளில் காங்கிரீட்டுகளும் பெயர்ந்து விழுந்துள்ளன. கோட்டைக்கு உள்ளே உள்ள ஓவியங்களும் பொலிவிழந்து காணப்படுகின்றன.

திடீர் அக்கறை

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை பார்வையிட்டு, கட்டபொம்மனுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். இதன் காரணமாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் அவசரமாக கோட்டைக்கு வரவழைக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பராமரிக்க வேண்டும்

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில துணைத்தலைவர் பாஞ்சை வி.கோபால்சாமி கூறும்போது, “வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை கடந்த சில ஆண்டுகளாகவே முறையாக பராமரிக்கப்படவில்லை. நாட்டின் வீர வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் இந்த கோட்டையை அரசு முறையாக பராமரிக்க வேண்டும். சுற்றுலாத்துறை சார்பில் போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என்றார் அவர்.

வேதனை அளிக்கிறது

கட்டபொம்மன் கோட்டையை பார்வையிட தேனியில் இருந்து நேற்று குடும்பத்தோடு வந்திருந்த ஆர்.கார்த்திகா என்பவர் கூறும்போது, “ விடுதலை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், எனது குழந்தைகளை இங்கே அழைத்து வந்துள்ளேன். கோட்டை மற்றும் உள்ளே உள்ள ஓவியங்களை பார்க்கும் போது பிரமாண்டமாக இருக்கிறது. ஆனால், முறையாக பராமரிப்பு பணிகள் செய்யவில்லை. கோட்டை வளாகத்தில் உள்ள செடிகள், மரங்கள் காய்ந்து கருகி கிடப்பது வேதனை அளிக்கிறது. முறையாக பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.

திட்ட மதிப்பீடு தயாரிப்பு

சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையை முழுமையாக சீரமைக்க ரூ.1.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்க பொதுப்பணித்துறையிடம் கேட்டுள்ளோம். கடந்த சில மாதங்களாக திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு தினங்களில் திட்ட மதிப்பீடு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின் அரசிடம் உரிய நிதி பெற்று கோட்டை முழுமையாக சீரமைக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x