Published : 11 Nov 2013 07:29 AM
Last Updated : 11 Nov 2013 07:29 AM

அதிமுக இணையதளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது

அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். பொழுதுபோக்குக்காக செய்ததாக விசாரணையில் கூறியிருக்கிறார்.



அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.aiadmkallindia.org. கடந்த 1-ம் தேதி இந்த இணைய தளத்துக்குள் புகுந்த ஒருவர் அதை செயல்படவிடாமல் முடக்கி விட்டார். மேலும், சில வாசகங்களையும் அதில் பதிவு செய்திருந்தார்.

'இஸ்லாம் ஜிந்தாபாத், லாங் லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பாகிஸ்தான் கொடியுடன் மனித மண்டை ஓட்டின் உருவமும் அதில் இருந்தன. நாங்கள் பாகிஸ்தான் ஹாக்கர்ஸ் க்ரூ. எங்களுக்கு நீதியும், அமைதியும் தேவை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். ஆணையரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிமுக இணைய தளத்துக்குள் நுழைந்தவர்களின் பட்டியலை சர்வர் மூலம் முதலில் சேகரித்தோம். அதில் ஒருவர் மட்டும் 300-க்கும் அதிகமான முறை அந்த இணைய தளத்துக்குள் நுழைந்து, அதிக நேரம் இணைப்பில் இருந்தது தெரிந்தது. அவரது முகவரியை சர்வர் மூலம் தேடியபோது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் என்பது தெரிந்தது. உடனே சனிக்கிழமை இரவில் அவரை கைதுசெய்து அவரிடம் இருந்த மடிக்கணினியையும் பறிமுதல் செய்தோம்.

இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, 'விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்தேன்' என்று சாதாரணமாக கூறினார். ஈஸ்வரன் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 66-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்து விட்டோம்.

ஈஸ்வரன் 2011 ம் ஆண்டு கணினி பொறியியல் படிப்பை முடித்து, பெங்களூரில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் இணைய தளத்துக்குள் நுழைந்து பிரச்சினைக்குரிய வாசகங்களை பதிவு செய்ததுதான் எங்களுக்கு புரியவில்லை. அவருக்கும், அவர் பதிவு செய்திருக்கும் வாசகங்களுக்கும் தொடர்பில்லாததுபோல உள்ளது.

அவர் மட்டும்தான் இந்த செயலை செய்தாரா அல்லது வேறு யாருடைய தூண்டுதலின் பேரில் இதை செய்தாரா என்பதை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால் ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x