Published : 01 May 2014 12:50 PM
Last Updated : 01 May 2014 12:50 PM
நெருக்கடியான நேரத்தில் கூட முதல்வர் தலைநகரில் இல்லாத காரணத்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாத காரணத்தாலும் தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளதாக கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோர் விரைவில் நலம் பெற விழைவினையும் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கேட்பாரற்ற நிலையிலே இருப்பதாகவும், அதுபற்றி அக்கறையோடு முறையாக நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்றும் நான் பல நாட்களாக தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தேன். ஆனாலும் அ.தி.மு.க. அரசினர் அதைக் காதில் போட்டுக் கொள்ளவும் இல்லை; கவனம் செலுத்தவுமில்லை.
பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது. காவல் துறையினர் என்ன தான் திறமையாகப் பணியாற்றிய போதிலும், அவ்வப்போது ஆய்வு செய்து, அவர்களை வழி நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டிய
அந்தத் துறையின் பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர் நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால் தான், இன்று காலையில்சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. வெடிக்காத பைப் வெடி குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப்படிப்பட்ட நிர்வாகச் செயல்பாடுகள் இல்லாமல் காவல் துறையினர் எப்படி முடிவெடுப்பது என்று புரியாமல் திசை அறியாத நிலையில் இருப்பதாகவும் கூறப் படுகிறது.
ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்றுஉடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்றிருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகள் மேலும் என்னென்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் காவல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மீண்டும் கொடநாடு சென்று விட்டார்". இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT