Published : 10 Aug 2016 08:12 AM
Last Updated : 10 Aug 2016 08:12 AM
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட உள்ளனர். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 24 மணி நேரமும் கடலோர காவல் படையினர் ரோந்து வருகின்றனர்.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னோக்கி செல்கிறது. எனவே, இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, நாட்டில் அமைதி இன்மையை ஏற்படுத்த சில தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டிவருவதாக மத்திய உள்துறை எச்சரித்துள்ளது. இந்த நிலையில், வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.
எனவே, பாதுகாப்பை பலப் படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய புலனாய்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுதந்திர தினத்துக் காக செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டிஜிபி அசோக் குமார் சக போலீஸ் அதி காரிகளுடன் ஆலோசனையை தொடங்கிவிட்டார். மேலும், அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்பி களுக்கும் பாதுகாப்பை சிறப் பாக கவனிக்கும் படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரவு ரோந்து பணியை முடுக்கி விட வேண்டும், வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் பிடிபட்டால் அவர்களிடம் உடனடியாக கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் விவரம்
அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மேன்ஷன்களிலும் சோதனை நடத்த வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுலாவுக்காக வந்துள்ள வெளி நாட்டினர் எத்தனை பேர்? அவர்கள் தற்போது எங்கெல்லாம் தங்கி உள்ளனர் என்ற பட்டியலையும் போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
2008-ம் ஆண்டு இந்தியாவுக்குள் கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பை தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். எனவே, இனி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக கடலோர பாதுகாப்பு படை உஷார் படுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நடமாட்டம்?
கடலோர கிராம மக்களிடம் சந்தேக நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இல்லை என்றால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு அழைத்து தகவல் தெரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்திய 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளையும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடி ஏற்ற உள்ள கோட்டை கொத்தளத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் டி.கே. ராஜேந் திரன் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். தலைமைச் செயலகத்தை சுற்றி மட்டும் சுமார் 1,000 போலீஸாரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 95 ஆயிரம் போலீஸார் உள்ளனர். இதில், 50 ஆயிரம் பேரை பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. யார் யாரை எங்கு பணியமர்த்துவது என்பது குறித்த பட்டியலை தயார் செய்யும் பணியை போலீஸ் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT