Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

அதிருப்தி வலுக்கிறது: கோவை மேயருக்கு சிக்கல்?

கோவை மேயருக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் பலர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் முதல்வரிடம் மனு கொடுக்க காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 80 பேரில் 15 பேர், மேயர் வேலுச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் மனு அளிக்க புதன்கிழமையிலிருந்து சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்டுகளுக்கு கூட நிதி ஒதுக்கும் மேயர் வேலுச்சாமி, எங்களுடைய வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை. திட்டங்களை செயல்படுத்த விடுவதில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகக் கூறியிருந்தனர். அவர்கள் வியாழக்கிழமையும் முதல்வரிடம் மனு கொடுக்க முயற்சித்தும் பலனில்லை எனத் தெரிகிறது.

முதல்வரின் உதவியாளர்கள், தங்களிடம் மனு கொடுக்குமாறு கேட்டும் மறுத்துவிட்டனர்.

முதல்வர் விசாரித்தார்

அவர்களிடம் பேசியபோது, ‘முதல்வரை காலையில் கோட்டைக்கு செல்லும்போது பார்த்தோம். அவர் காரின் வேகத்தைக் குறைத்து, மனு கொடுக்க வந்தீங்களா? வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டுச் சென்றார். மனு கொடுக்காமல் புறப்படுவதாக இல்லை’ என்றனர்.

அடிமைபோல்...அதிருப்தி 21

இவர்களில் 31-வது வார்டு மாரி செல்வன் கூறியது:

மேயர் வேலுச்சாமி கட்சிக்காரர்களையே பாரபட்சமாக பார்க்கிறார். அவர் எப்படியெல்லாம் கவுன்சிலர்களை அடிமை போல் நடத்தி, அவருக்கு கட்டுப்படாதவர்களை புறக்கணிக்கிறார் என்பது மனுவில் விவரமாக உள்ளது. உதாரணமாக என் வார்டில், தந்தை பெரியார் நகரில் ரூ.25 லட்சத்தில் சிமென்ட் கான்கிரீட் சாலை திட்டம் தயாரிக்கப்பட்டது. அது 2 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி பாகுபாடு இல்லாமல் ரூ.30 லட்சத்தில் தார் ரோடு போட்டார்கள். அந்த திட்டம் என் வார்டுக்கு மட்டுமல்ல மேயருக்கு பிடிக்காத அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு வரவேயில்லை. இதைப்பற்றி கேள்வி கேட்க மன்றத்தில் எழுந்தால் ‘ஏய்.. உட்கார்…’ என்று அதிகாரமாக அதட்டி உட்கார வைக்கிறார். நாங்கள் 15 கவுன்சிலர்கள்தான் புதன்கிழமை மனு கொடுக்க வந்தோம். இப்போது அதுவே 21 ஆக உயர்ந்துள்ளது. இதைக் கேள்விப்பட்டு இன்னமும் மேயர் மீது புகார் கொடுக்க அதிருப்தி கவுன்சிலர்கள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.

மேயர் வேலுச்சாமி கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். கவுன்சிலர்கள் தவிர, கட்சியில் அதிருப்தியாளர்களும் இவர்களுடன் சேர்ந்து புகார் கொடுக்க வந்துள்ளனர்.

பின்னணி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால், சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தவர்தான் 31-வது வார்டு கவுன்சிலர் மாரி செல்வம்.

இவர், கவுண்டம்பாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் தீவிர விசுவாசி. மேயருக்கும், ஆறுக்குட்டிக்கும் இடையே ஏற்கெனவே மாவட்டச் செயலாளர் பதவிக்காக பனிப்போர் நடந்தது. அதன் எதிரொலியாக, கடந்த ஆண்டு தொடக்கத்தில், ‘மேயர் ஒருமையில் அவையில் பேசுகிறார், திட்டுகிறார். சபையில் கேள்வி கேட்க விடுவதில்லை. அப்படி மீறி கேட்டால், எங்கள் வார்டுகளைப் புறக்கணிக்கிறார். எந்த திட்டங்களுக்கும் அனுமதி அளிப்பதில்லை’ என்று புகார் எழுப்பி, 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. அதிருப்தி கவுன்சிலர்கள் முதல்வருக்கு மனு அனுப்பினர். அந்த விவகாரம் எப்படியோ காணாமல் போய்விட்டது.

கவுன்சிலர் மாரிசெல்வன் அணியில் தற்போது அந்த 40 பேரும் சேர்ந்து வலுவான அணியாக மாற வாய்ப்புள்ளது என்கின்றனர் கோவை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள்.

இது பற்றி கேட்க மேயர் வேலுச்சாமியை தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x