Last Updated : 11 May, 2017 02:05 PM

 

Published : 11 May 2017 02:05 PM
Last Updated : 11 May 2017 02:05 PM

நீதிபதி கர்ணன் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சொந்த கிராமத்தில் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

கர்ணன் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது சகோதரர் அறிவுடைநம்பி கர்நத்தம் கிராமத்தில், கிராம மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன். இதையடுத்து கர்ணனுக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு தினங்களுக்கு உத்தரவிட்டனர். இதனால் நீதித்துறையில் பரபரப்புச் சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கர்நத்தம் கிராமம்.அவரது சொந்த ஊரில் அவரைப்பற்றி விசாரித்த போது,சில சுவராஸ்யமான தகவல்களைக் கூறினர் கர்நத்தம் கிராம மக்கள்.

அந்த ஊரில் வசிக்கும் அவரது சிறிய தந்தை (மாற்றுத்திறனாளி) காசிலிங்கம் கூறுகையில், கர்ணனின் தந்தை சுவாமிநாதன் தனக்கு மூத்தவர் என்றும், அவருக்கு மொத்தம் 5 ஆண்கள், 3 பெண் பிள்ளைகள். இதில் கர்ணன் 2-வது. சிறுவயது முதலே நன்றாக படிக்கக் கூடியவர்.

கர்ணனின் இயற்பெயர் கருணாநிதி. 15 வருடங்களுக்கு முன்பு தான் தனது பெயரையும் கர்ணன் என்று மாற்றியுள்ளார். கர்ணனின் இளைய சகோதரர் அறிவுடைநம்பி என்பவர் அதே ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும், விருத்தாசலத்தில் வழக்கறிஞர் தொழிலை செய்துவருகிறார். தங்கள் குடும்பத்தினரும், ஊர் மக்களும் சேர்ந்து, கர்ணன் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் வைரவர் கோயிலை கட்டிவருகின்றனர்.இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என்றார்.

வழக்கறிஞராக பணியை தொடங்கிய கர்ணன், திமுக ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்தவர்.அதனால் அவரது தந்தை அவருக்கு கருணாநிதி என்ற பெயரை வைத்ததாகவும், பின்னாளில் உளுந்தூர்பேட்டை தனித் தொகுதியாக இருந்த அங்கு போட்டியிட விரும்பி திமுகவில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதையடுத்து அரசு வழக்கறிஞராக பணியாற்றும் வாய்ப்பு பெறுவதற்காக அதிமுகவினரை அணுகியுள்ளார். அப்போது அவர் பெயர் கருணாநிதி என்று இருப்பதால், அதிமுக தலைமை அவருக்கு அரசு வழக்கறிஞராக தேர்வு செய்வது கடினம் என அதிமுகவினர் கூறியதாகவும், அதனால், தனது பெயர் கருணாநிதி என்ற தனது பெயரை கர்ணன் என மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்ணனை தேடி போலீஸார் சென்னை, காளகஸ்தி என பல இடங்களில் தேடிவருகின்றனர். இந்த நிலையில் கர்ணன் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது சகோதரர் அறிவுடைநம்பி கர்நத்தம் கிராமத்தில், கிராம மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அதைத்தொடர்ந்து நேற்று கிராமத்தில் வீதிகளிலும், சில குடியிருப்புகளிலும் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x