Last Updated : 27 Jan, 2014 12:00 AM

 

Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM

வறட்சிக் காலத்திலும் அதிக விளைச்சல் பெறுவது எப்படி?- முதல்வரிடம் விருது பெற்ற விவசாயி சிறப்புப் பேட்டி

வறட்சிக் காலத்திலும் சிறப்பான நெல் மகசூலை பெற்றது எப்படி என்பது குறித்து முதல்வரின் கையால் விருது பெற்ற ஈரோடு விவசாயி விளக்கம் அளித்துள்ளார். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் பணியை நிறுத்தி, அப்பகுதியில் நிலத்தடி நீர் பெருக வழிவகுக்க வேண்டுமென்றும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி செய்யும் விவசாயியை ஊக்குவிக்கும் பொருட்டு, குடியரசு தினத்தன்று ரூ.5 லட்சத்துடன் கூடிய சிறப்பு விருதினை அரசு வழங்கி வருகிறது.

ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த ந.பரமேஸ்வரனுக்கு, இந்த ஆண்டு இவ்விருதினை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமைவழங்கினார்.

விருது பெற்ற அவர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

2012-13-ம் ஆண்டில் திருந்திய நெல் சாகுபடி முறையில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று ஒரு ஹெக்டேருக்கு 15,275 கிலோ மகசூல் எடுத்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தித் திறன் ஈட்டியுள்ளேன். கடந்த ஆண்டு காவிரியும் பவானி ஆறும் வற்றி விட்ட நிலையில் கிணற்று நீரை வைத்து பயிரிட முடிவு செய்தோம். அரசு வேளாண் அதிகாரிகளைச் சந்தித்து திருந்திய நெல் சாகுபடி செய்வது பற்றி பயிற்சி பெற்று பயிரிட்டோம்.

நெற்பயிரை பொருத்தவரை தழைச்சத்து (நைட்ரஜன்), மணிச்சத்து (பாஸ்பரஸ்), சாம்பல் சத்து (பொட்டாசியம்), மற்றும் துத்தநாகச் சத்து (ஜிங்க்) ஆகியவை முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். தழைச்சத்து தேவை அறிந்து, பசும்தாழ் உரம் தக்கைப் பூண்டு வகை செடிகளை விதைப்பு செய்து, மடக்கி, உழவு செய்த நிலத்தில் 10 டன் நன்கு மக்கிய உரம் இட்டு உழவு செய்தேன்.

ஒரு நாற்றின் வயது 14 நாட்கள் ஆனதும், நடவு தயார் செய்ய வேண்டும். நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்து தழைச்சத்து இடவேண்டும் என அறிந்து செயல்பட்டதால் விளைச்சல் அதிகம் கிடைத்தது.

நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை

`கோண வீடர்' கருவி மூலம் களை எடுத்து சேற்றில் அழுத்தி விடவேண்டும். திருந்திய சாகுபடியை தவிர்த்து, வழக்கமான முறையைக் கையாண்டிருந்தால் எனக்குக் கிடைத்ததில் பாதி மகசூல்தான் கிடைக்கும்.

கீழ்பவானி கான்கிரீட்

கீழ்பவானி வாய்க்காலில் இருந்து கசிந்து வந்த நீரின் காரணமாக எங்கள் பகுதிகளில் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. அதனால்தான் கடும் வறட்சியிலும் நல்ல விளைச்சலைக் காணமுடிந்தது. ஆனால், அரசு இப்போது, அந்த 150 கி.மீ. நீள கால்வாயின் பக்கவாட்டிலும், தரையிலும் கான்கிரீட் போட்டு வருகிறது. இதனால் இனி அந்த கால்வாயில் இருந்து நீர் கசியாது.

ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகள் வறட்சி பூமியாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பணியினை உடனடியாக நிறுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x