Last Updated : 07 Dec, 2013 12:00 AM

 

Published : 07 Dec 2013 12:00 AM
Last Updated : 07 Dec 2013 12:00 AM

சமுதாயத்தில் மன மாற்றம் ஏற்பட்டால்தான் பாலியல் வன்முறைகளைத் தடுக்க முடியும்: நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்

சமுதாயத்தில் மன மாற்றம் ஏற்பட்டால்தான் பாலியல் வன்முறைகளை தடுக்க முடியும் என்று ‘தி இந்து’ மையம் நடத்திய கருத்தரங்கில் முன்னாள் நீதிபதி பிரபா ச்ர்தேவன் கூறினார்.

‘தி இந்து’ அரசியல் மற்றும் பொது கொள்கைகளுக்கான மையமும் அமெரிக்க தூதரகமும் இணைந்து ‘பாலியல் வன்முறை: சவால்களும் நிறுவனங்களின் பொறுப்புகளும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை வெள்ளிக்கிழமை சென்னையில் நடத்தின. இதில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் பிலிப், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், கலிபோர்னியாவின் பாலியல் வன்கொடுமை எதிர்ப்புக் குழு இயக்குநர் டெனிஸ் லாபர்ட் ஆகியோர் பங்கேற்றனர். கருத்தரங்கை ‘தி இந்து’ மையத்தின் ஆலோசகர் குழு உறுப்பினரும் பேராசிரியருமான ஆ.இரா.வெங்கடாசலபதி ஒருங்கிணைத்தார்.

‘தி இந்து’ மையத்தின் நிர்வாகக்குழு உறுப்பினரான என்.ராம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கலிபோர்னியாவின் பாலியல் வன்கொடுமை எதிர்ப்புக் குழு இயக்குநர் டெனிஸ் லாபர்ட், ‘‘பாலியல் வல்லுறவு குறித்த விசாரணையின்போது அந்தப் பெண்ணின் முந்தைய பாலியல் நடத்தையை அவருக்கு எதிராக பயன்படுத்த முடியாது’’ என்றார். அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கையாள எடுக்கப்படும் நிர்வாகரீதியான நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேசும்போது, ‘‘சமுதாயத்தில் மன மாற்றம் ஏற்பட்டால் தவிர பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க முடியாது. அநீதிகளை களைந்து சமத்துவத்தை நிலைநாட்டும் கருவியாக சட்டம் இருக்க வேண்டும். பணியிடங்களில் அமைக்கப்படும் குழுக்களில் இடம் பெறுவோர், பாலியல் வன்முறை வழக்குகளை கையாண்ட அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

‘‘பெண்கள் 30 வகையான வன் முறைகளுக்கு ஆளாகின்றனர். வன்முறை என்பது மனதில் இருந்து தொடங்குகிறது. அதற்கு கலாச்சார ஏற்புத் தன்மை இருக்கி றது. இதை முற்றிலும் எதிர்க்க வேண்டும். பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் பொருளாதார மதிப்பீடு அளித்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பங்களிப்பார்கள்” என்று பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் பிலிப் தெரிவித்தார்.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பேசுகையில், ‘‘ஒரு கல்வி நிலையத்தில் பேராசிரியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால் அவர் அதை வெளியில் கூறக்கூடாது என்று நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இவ்வாறான புகார்கள் கல்வி நிலையங்களில் அதிகரித்து வருகின்றன. ஆனால், பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டத்துக்கு இன்னும் விதிகள் அமைக்கப்படவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x