Published : 11 Nov 2014 11:44 AM
Last Updated : 11 Nov 2014 11:44 AM

5 மீனவர்களை விடுவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.

போதைப் பொருட்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இது, பொய் வழக்கு என்றும், தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே காரணங்களுக்காக, நவம்பர் 10-ம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்தன. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கினிமானுவல் தலைமையிலும், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி நளினி, செயலாளர் ரேவதி தலைமையிலும் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கூடினர்.

அதையடுத்து உயர் நீதிமன்ற வராண்டாக்கள் வழியாக ஊர்வலமாக சென்ற அவர்கள், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும், 5 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்றத்துக்குள் கோஷமிட்டபடி நுழைந்தனர். அதைப் பார்த்த தலைமை நீதிபதி, உடனடியாக வெளியேறும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார். அவர்களும் அங்கிருந்து வெளியேறி மற்ற நீதிமன்றங்கள் வழியாக ஊர்வலம் சென்றனர்.

அதையடுத்து என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்த வழக்கறிஞர் கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர். பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன் கூறும் போது, “5 மீனவர்களை மீட்கும் மேல்முறையீட்டு வழக்கில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ ஒரு குழு அமைக்கப்படும்” என்றார்.

சாலை மறியலால் 15 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போராட்டத்தை முடித்து வழக்கறி ஞர்கள் கலைந்து சென்றனர். வழக்கறிஞர்கள் போராட்டத்தை முன்னிட்டு உயர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x