Published : 30 Mar 2014 10:17 AM
Last Updated : 30 Mar 2014 10:17 AM
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சிலர் மற்றும் சுயேச்சைகள் என 63 பேர் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. காலை 11 முதல் மாலை 3 மணி வரை மனுக்கள் பெறப்பட்டன.
முதல் நாளில் 63 பேர்
முதல் நாளில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளைச் சேர்ந்த எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் அய்யர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜன், டி.விக்கிரமன், ஆம் ஆத்மி கட்சியின் உதயகுமார், எம்.பி.ஜேசுராஜ். எம்.புஷ்பராயன் ஆகியோரும் மற்றும் சில சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்தனர். சில தொகுதிகளில் ஒரு மனுகூட தாக்கல் ஆகவில்லை. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் முதல் நாளில் 63 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக தேனி, விருதுநகர், மதுரை தொகுதிகளில் தலா 5 பேர் மனு செய்துள்ளனர்.
சென்னையில் 9 பேர்
வடசென்னை தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் நிஜாம் முகைதீன், பேசின்பிரிட்ஜில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அதிகாரி லட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேதொகுதியில் எஸ்யுசிஐ கட்சியை சேர்ந்த ஒருவரும் மனு தாக்கல் செய்தார்.
தென்சென்னை தொகுதியில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 4 பேர் சுயேச்சைகளாக மனு தாக்கல் செய்தனர். மத்திய சென்னையில் தமிழக தலித் கட்சியைச் சேர்ந்த தயா.கிருஷ்ணமூர்த்தி, இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே) எஸ்.டி.கிருஷ்ணகுமார், சுயேச்சையாக எஸ்.கந்தசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் மொத்தம் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைப் பொருத்தவரை முதல் நாளில் ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2 நாட்கள் விடுமுறை
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏப்ரல் 5-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (தெலுங்கு வருடப் பிறப்பு) விடுமுறை தினம் என்பதால் இந்த 2 நாட்களிலும் மனு தாக்கல் இல்லை. மீண்டும் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை மனு செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 9 ஆகும்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமாவாசை. இது நல்ல நாள் என்றாலும், விடுமுறை தினம் என்பதால் மனு செய்ய முடியாது. நாளை பிரதமை தினமாகும். எனவே, செவ்வாய்க் கிழமை முதல் வளர்பிறை என்பதால் அதற்குப் பிறகே முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT