Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM
வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மந்தமாகவே நடந்து வருகின்றன. 10 லட்சம் வாடகை வீடுகளில் 4 லட்சம் பேர் மட்டுமே குடியிருப்பவர்களின் விவரங்களை கொடுத்துள்ளனர்.
சென்னையில் சமூக விரோத குற்றச் செயல்கள் நடப்பதைத் தடுக்க வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
இந்த விவரங்களை அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் அறிவித்திருந்தார். இதற்கான விண்ணப்பங்களை அனைத்து காவல் நிலையங்களில் நேரிலும், tnpolice@gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.விண்ணப்ப படிவத்தின் மேல் பகுதியில் வீட்டு உரிமையாளரின் விவரங்களும், அதன் கீழ் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களும் இடம் பெற்றுள்ளன. குடியிருப்போரின் பெயர், முகவரி, செல்போன் நம்பர், முன்பு குடியிருந்த இடம், நிரந்தர முகவரி போன்றவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். வாடகைக்கு குடியிருப்போரின் போட்டோவும் ஒட்ட வேண்டும்.வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு டிசம்பர் 1-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து முதல் ஒரு வாரம் அனைத்து காவல் நிலையங்களும் வீட்டு உரிமையாளர்களால் நிறைந்திருந்தன. பலர் உடனே வாடகைக்கு இருப்பவர்களின் தகவல்களை சேகரித்து கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் சென்னை மற்றும் புறநகரில் 23 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் சுமார் 10 லட்சம் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை சுமார் 4 லட்சம் வீடுகளின் விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.காவல் துறையின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் காவல் துறையின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து காவல் துறை சார்பில் மீண்டும் அறிவிப்பு கொடுத்ததும், ஒரு சிலர் மட்டும் விவரங்களை கொடுத்தனர். ஆனால், இப்போது ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு ஓரிரு வீட்டு உரிமையாளர் மட்டுமே வந்து தகவல்களை கொடுக்கின்றனர். ஜனவரி 31-ம் தேதியுடன் காவல் துறை அறிவித்திருந்த காலக்கெடு முடிகிறது. ஆனால், பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களுக்கு காவல் துறை இப்படி ஒரு அறிவிப்பு கொடுத்ததே தெரியவில்லை.
தகவல்களை கொடுக்காத வீட்டு உரிமையாளர்களுக்கு 188-வது பிரிவின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT