Published : 14 Mar 2014 12:00 AM
Last Updated : 14 Mar 2014 12:00 AM

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரும் பசுமைக்குடில் சாகுபடி

தமிழக அரசு தோட்டக்கலைத் துறையின் “பாதுகாக்கப்பட்ட உயர்தர பசுமைக்குடில் சாகுபடித் திட்டம்” மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பசுமைக்குடில் என்ற தொழில்நுட்பம் இந்தியாவில் புனே, பெங்களூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் ஓசூர் பகுதிகளில் 1990-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. “பாதுகாக்கப்பட்ட உயர்தர பசுமைக்குடில் சாகுபடித் திட்டம்” என்று அழைக்கப்படும் இத்திட்டம் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கொடைக்கானல், ஊட்டி ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பிரபலமடைந்து வருகிறது.

குறைந்த நிலப்பரப்பில், குறைவான ஆட்களைக் கொண்டு அதிக மகசூல் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம். பசுமைக் குடிலில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து விளைபொருட்களுக்கு நல்லவிலை பெற முடியும் என்பது பயனாளிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் சாகுபடி

பசுமைக்குடிலில் ஆண்டு முழுவதும் ரோஜாப்பூ, பூச்செண்டில் பயன்படுத்தப்படும் செர்பரா, கார்னேஷன் ஆகிய பூக்கள், தக்காளி, பீன்ஸ், முலாம்பழம், ஐரோப்பிய வெள்ளரிக்காய், ரசத்துக்குப் பயன் படுத்தப்படும் செர்ரி தக்காளி, நட்சத்திர ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், குடமிளகாய் ஆகியவற்றைச் சாகுபடி செய்யலாம்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் கலைச்செல்வி, அதிகாரி கே.செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:

செர்பரா பூ

பசுமைக்குடில் சாகுபடிக்கு குறைந்தபட்சம் 1000 சதுர மீட்டர் நிலப்பரப்பு (கால் ஏக்கர்) இருக்க வேண்டும். பசுமைக்குடில் அமைக்கும்போது ஒரு சதுர மீட்டருக்கு ரூ.935 செலவாகும். இதில், ரூ.467.50 அரசு மானியம், மீதித்தொகையை ரூ.467.50-ஐ பயனாளி செலுத்த வேண்டும். ஒரு ஏக்கரில் பசுமைக்குடில் அமைக்க ரூ.37.40 லட்சம் செலவாகும். இதில், ரூ.18.70 லட்சம் மானியம்.

“செர்பரா பூ” (gerbera) சாகுபடி செய்தால், ஒரு ஏக்கரில் 24 ஆயிரம் செடிகளை நட முடியும். ஒரு செடியில் ஆண்டுக்கு 50 பூக்கள் வரை பூக்கும். மொத்தம் 12 லட்சம் பூக்கள் சாகுபடி செய்யலாம். இதன்மூலம் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வருவாய் கிடைக்கும். மாதத்துக்கு ரூ.3 லட்சம். செலவுபோக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரை நிகர வருவாய் ஈட்டமுடியும். “செர்பரா பூ” மலர்செண்டு தயாரிக்கவும், திருமணம், கட்சிப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட மேடைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ரோஜாப்பூ சாகுபடி செய்தால், காதலர் தினம், கிறிஸ்துமஸ் காலங் களில் நல்ல விலை கிடைக்கும். மற்ற நாட்களில் சராசரியாக ஒரு ரோஜாப்பூ ரூ.2.50 முதல் ரூ.3-க்கு விற்பனையாகும்.

குடமிளகாய்

ஒரு ஏக்கரில் குடமிளகாய் (capsicum) சாகுபடி செய்தால், ஒன்பது மாதத்தில் 40 டன் கிடைக்கும். ஒரு கிலோ குடமிளகாய் ரூ.40-க்கு விற்கும். ஏக்கருக்கு ரூ.16 லட்சம் வருவாய் கிடைக்கும். செலவுபோக ரூ.8 லட்சம் நிகர வருவாய் ஈட்டலாம். பசுமைக்குடில் சாகுபடி பரப்புக்கு ஏற்ப ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றார் அவர். மேலும் விவரங்களுக்கு 04343- 231130 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x