Published : 17 Jan 2014 09:25 AM
Last Updated : 17 Jan 2014 09:25 AM
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டால் அவரை வீழ்த்தப் புதுக்கூட்டணி உருவாகியுள்ளது.
அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் சிலர் சிதம்பரம் அருகே நாட்டார்மங்க லம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதி பரும் காங்கிரஸ் அனுதாபியுமான மணிரத்தினம் தலைமையில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். அவர்கள் கூட்டாகத் திருமாவளவனுக்கு எதிராகக் காய்நகர்த்தி வருவதாகப் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து”விடம் மணிரத்தினம் கூறுகையில், “அடிப்படையில் காங்கிரஸ் விசுவாசியான நான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் பகுதியில் சமூகப் பணி, கல்விப் பணிகளைச் செய்து வருகிறேன். இத்தொகுதியில் இருக்கும் 618 கிராமங்களில் கூட்டம் நடத்தியிருக்கிறேன். அடிப்படை யில் சிதம்பரம் தொகுதி காங்கிரஸின் கோட்டை. இளைய பெருமாள், வள்ளல் பெருமாள் ஆகியோர் இங்குப் பல முறை வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் சார்பில் நான் இங்குப் போட்டியிடுவேன்” என்றார்.
“நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் காங்கிரஸுக்கு எதிரான அலை வீசும் நிலையில் - சரியான கூட்டணியும் அமையாத பட்சத்தில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெறுவேன் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? அதை எல்லாம்விட காங்கிரஸில் சீட்டு தருவார்களா?” என்று அவரிடம் கேட்டோம்.
“கிராமங்களில் காங்கிரஸ் அலை வீசுகிறது. எனது கல்வி சேவையைக் கேள்விப்பட்டு ஒரு மாதம் முன்பு ராகுல் காந்தி என்னை நேரில் அழைத்து அரைமணி நேரம் பேசினார். அதனால், வெற்றி வாய்ப்புள்ள எனக்குக் காங்கிரஸ் கட்சி கட்டாயம் சீட்டு அளிக்கும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் என்னுடன் இணைந்துள்ளனர். எனவே சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டால் நிச்சயம் தோற்பார்” என்றார்.
“ஒருவேளை திமுக கூட்டணி யில் கடைசி நேரத்தில் காங்கிரசும் சேரந்துவிட்டால், நீங்கள் சிதம்பரத்தில் எப்படிப் போட்டியிடுவீர்கள்?” என்று கேட்டோம். “காங்கிரஸ் திமுக வுடன் மீண்டும் சேராது என்ற நம்பிக்கை இருக்கிறது” என பதிலளித்தார் மணிரத்தினம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய சிவப் பிரகாசத்திடம் பேசியபோது, “விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைக் கட்டமைத்து அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தபோது 110 உறுப்பினர்கள் தேவையாக இருந்தது. சிந்தனைசெல்வன், ஆற்றல் அரசு, செல்வபெருந்தகை, கருப்புசாமி, விநாயகமூர்த்தி, விடுதலைநம்பி, தர்மலிங்கம் உட்பட 110 உறுப்பினர்களை ஒருங்கிணைத்துக் கொண்டு சென்றேன். ஆனால், அக்கட்சி வளர்ந்த பிறகு தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் தலித் மக்களுக்கு அரசியல் அதிகா ரத்தைக் கொண்டு சேர்ப்பிப்பது ஆகியவற்றைச் செய்யத் தவறி விட்டது.
சிதம்பரம் தொகுதி மக்களுக்குத் திருமாவளவன் என்ன செய்தார்? அவர் மக்களிடம் இருந்து விலகிவிட்டார். அதனால், கட்சியில் இருந்து விலகி அவ ருக்கு எதிராக சிதம்பரத்தில் அணி திரண்டுள்ளோம்” என்றார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னியரசுவிடம் கேட்டோம். “எங்கள் கட்சித் தலைவர் சிதம்பரம் தொகுதியில்தான் போட்டி யிடுவார். இது ஜனநாயக நாடு. அதனால், மணிரத்தினம் என்பவர் போட்டியிடுவதிலும் எந்தத் தவறும் இல்லை. எங்களுக்கு மக்கள் செல்வாக்கு உண்டு. அதனால், நாங்கள் அவரை பொருட்படுத்த மாட்டோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT