Published : 03 Apr 2014 07:47 PM
Last Updated : 03 Apr 2014 07:47 PM

பாஜகவின் பி டீம்தான் ஜெயலலிதா: ப.சிதம்பரம் சாடல்

கிரிக்கெட் விளையாட்டில் 12-வது ஆட்டக்காரர் போல் இயங்கும் ஜெயலலிதா, பாஜகவின் 'பி' டீம் ஆக ரகசியமாக செயல்படுவதாக, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடினார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு சிவன்கோயில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் வரி பகிர்வு மூலமாக மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழக அரசுக்கு கடனாக ஆயிரக்கணக்கான கோடிகளை வழங்கி உள்ளோம். 2008-09-ம் ஆண்டில் ரூ. 15,646 கோடி; 2009-10-ல் ரூ. 15,487 கோடி; 2010-11-ல் ரூ. 19,799 கோடி; 2011-12-ல் அதிமுக அரசில் வழங்கியது ரூ. 21,711 கோடி; 2012-13-ல் வழங்கியது ரூ. 23392 கோடி என ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதம் நிதியை அதிகரித்து வழங்கி உள்ளோம். இனிமேல் நிதி வழங்கவில்லை என முதல்வர் குறை சொல்லக் கூடாது. தமிழகத்தில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்களை பார்க்க வேண்டும் என்றால், முதல்வர் தரை மார்க்கமாக பயணம் செய்ய வேண்டும்.

ரூ. 4 ஆயிரம் கோடியில் திட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் பாரபட்சமின்றி நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிடுகிறேன். சென்னை துறைமுகத்தில் 16 திட்டங்களுக்கு ரூ. 3792 கோடி, எண்ணூர் துறைமுகத்தில் 8 திட்டங்களுக்கு ரூ. 6659 கோடி, தூத்துக்குடியில் 17 திட்டங்களுக்கு ரூ. 4105 கோடி என ரூ. 14 ஆயிரம் கோடியில் திட்டங்கள் நிறைவேறி இருக்கின்றன.

எண்ணூரில் அனல் மின்சாரத்தில் 1500 மெகாவாட் உற்பத்தி, நெய்வேலியில் 250 மெகாவாட், தூத்துக்குடியில் கட்டுமான நிலையில் இருப்பது 500 மெகாவாட், கூடங்குளத்தில் 2000 மெகாவாட் என 4250 மெகாவாட் மின் உற்பத்தியை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. மேலும் செய்யூரில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அனுமதி அளித்திருக்கிறோம்.

மத்திய அரசு 4250 மெகாவாட் மின் உற்பத்திக்கு வித்திட்டிருக்கும் அதேவேளையில், மாநில அரசு 1952 மெகாவாட்டிற்கு மட்டுமே வித்திட்டுள்ளது. மொத்தத்திற்கு ரூ. 23 ஆயிரம் கோடி மதிப்பில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரதமர் கோஷம் என்னாச்சு?

கருணாநிதி அளவுக்கு ஜெயலலிதாவிடம் அடக்கமும் கிடையாது, கண்ணியமும் கிடையாது. 20 நாள்களுக்கு முன்பு வரை அம்மா தான் பிரதமர் என்று அக்கட்சியினர் முழங்கினர். தற்போது அம்மாவே பிரதமர் என பேசவில்லை என்றவுடன், அதிமுகவினர் சும்மா இருக்கின்றனர்.

கிரிக்கெட்டில் 12-வது ஆட்டக்காரர் ஜெயலலிதா

கிரிக்கெட் விளையாட்டில் 12-வது ஆட்டக்காரர் ஒருவர் இருப்பார். அவர் பேட்டிங், பவுலிங் செய்யக் கூடாது. ஆனால் ஆட்டக்காரர்களில் யாருக்காவது காயம்பட்டாலோ வெளியேற முற்பட்டாலோ, 12-வது ஆட்டக்காரர் சென்று பீல்டு செய்யலாம். அதுபோன்று பாஜக ஆட்சி அமைக்க முன்வந்தால், அவர்களுக்கு உதவ 12-வது ஆட்டக்காரராக ஜெயலலிதா உள்ளார். பாஜகவின் ‘பி’ டீம் ஆக அவர் ரகசியமாகச் செயல்படுகிறார். இதனால்தான், பாஜக தலைவர்களை ஜெயலலிதா விமர்சிப்பதில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் மருகுகிறார்கள். இதனைத் தெளிவுபடுத்தாதவரை நான் ‘பி’ டீம் என்று ஜெயலலிதாவை குற்றஞ்சாட்டுவேன்" என்றார் ப.சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x