Published : 26 Jan 2017 06:49 PM
Last Updated : 26 Jan 2017 06:49 PM
கோவை மாவட்ட வனப்பகுதிகளில் ரயிலில் அகப்பட்டும், மின்வேலியில் சிக்கியும் உயிரிழக்கும் யானைகள் தற்போது புதைசேறு அபாயத்திலும் சிக்கித் தவிக்கிறது. இப்படி சிக்கும் யானைகளை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் வனத்துறையினர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பல்வேறு நோய் தாக்குதலினாலும், ரயில், மின்வேலிகளில் சிக்கியும் 15-க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. அதிலும் கடந்த வாரம் நிகழ்ந்த யானைகளின் மரணம் மிகவும் மோசமானது.
கடந்த 16.01.2017 அன்று மேட்டுப்பாளையம் நெல்லிமலைக்காட்டில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் தண்ணீர் தேடி தாசம்பாளையம் கிராமத்தில் நுழைந்தது. இங்கிருந்த தென்னந்தோப்பிற்குள் நுழைய முயன்ற யானைகளை தோட்டத்தைச் சுற்றியிருந்த மின்கம்பியில் இருந்த மின்சாரம் தாக்கியது. அதில் 2 பெண் யானைகள் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.
இதில் இறந்த 30 வயது பெண் யானையின் 2 வயதுக் குட்டி அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தது. தாயின் உடலை சுற்றியுள்ள மின்கம்பியை அகற்றி காப்பாற்றப் போராடியது. அப்படி மின்கம்பியை இழுத்ததில் அதன் தும்பிக்கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதை வனத்துறையினர் விரட்டியடித்து இறந்த யானைகளின் உடலை மீட்டு அடக்கம் செய்தனர். அடிபட்ட குட்டியானைக்கு சிகிச்சையளிக்கவும் முயற்சி செய்தனர். அது மிகுந்த ஆக்ரோஷத்துடன் சிகிச்சையளிக்க வந்தவர்களையே தாக்கியதால் புலி மற்றும் சிறுத்தைகளை பிடிக்கும் வலை கொண்டு பிடித்தனர்.
அதை அருகில் உள்ள வனத்துறை மரக்கிடங்கிற்கு கொண்டு வந்து சிகிச்சையளித்தனர். கைகால் கட்டப்பட்ட நிலையில் இருந்த குட்டியானை அப்போதும் ஆக்ரோஷம் மாறாமல் கட்டுகளை அறுத்துக் கொண்டு காட்டிற்குள் பாய்ந்தது. அதை பிடித்து சிகிச்சையளிக்க வழியில்லாமல் மருத்துவர்கள் அதற்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர். தள்ளாடிய நிலையில் பிடிபட்ட அந்த யானை அரை மணிநேரத்தில் இறந்தது.
இந்த சூடு ஆறுவதற்குள் கடந்த 23-ம் தேதி மாலை பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான அணைக்காட்டில் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று புதைசேற்றுக்குழிக்குள் அகப்பட்டது. அது வெளிவரமுடியாமல் பிளிறிக் கொண்டிருக்க, அதை அடுத்த நாள் அப்பகுதிக்கு ரோந்து சென்ற வேட்டைத் தடுப்புக்காவலர்களே கண்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பல்வேறுபட்ட அலுவலர்களையும் வரவழைத்துள்ளனர்.
(மீட்கப்பட்ட நிலையில் யானை)
20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், தீயணைப்புத்துறை ஊழியர்கள், 2 பொக்லைன் இயந்திரங்கள், ஒரு டிராக்டர் என பயன்படுத்தி அந்த யானையை 24-ம்தேதி மாலை வேளையில் மீட்டு வெளியில் சமதளத்தில் கிடத்தியும் விட்டனர். இரவு நேரமாகி விட்டதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டனர். அடுத்தநாள் சென்று அந்த இடத்தில் பார்த்தால் சேற்றில் மீட்கப்பட்ட யானை ஜன்னி கண்டதுபோல் நடுங்கி எழுந்திருக்க முடியாமல் அதே இடத்தில் இருந்திருக்கிறது.
அதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அதற்கு வைட்டமின் மருந்துகள் ஊசி மூலம் ஏற்றப்பட்டன. உண்பதற்கு கரும்பு, வாழை, வாழைப்பழம் போன்றவற்றை அளித்துள்ளனர். பிறகு பொக்லைன் இயந்திரத்தை வைத்து அதன் முன்னங்கால் பகுதியில் கயிறு கட்டி தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. சற்றுநேரம் நடுங்கியபடியே எழுந்து நின்ற யானை பிறகு இயல்பு நிலைக்கு வந்து பிறகு ஆட்களை துரத்த ஆரம்பித்திருக்கிறது. எல்லோரும் மூலைக்கொருவராக ஓடி தப்பிக்க, சேற்றில் தப்பிப்பிழைத்த யானையும் வனத்திற்குள் ஓடி மறைந்திருக்கிறது.
தற்போது அந்த யானை வனத்திற்குள் சரியாக கூட்டத்தில் சென்று சேர்ந்ததா? மீண்டும் படுத்துவிட்டதா? என்பதை கால்நடை மருத்துவர் குழு மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் பவானி சாகர் பகுதியில் நிலவும் புதைசேறு சூழல் காட்டு யானைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்கிற சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, 'பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்கும் இந்த டேம்காடு வரை தண்ணீர் எப்பவும் தேங்கி நிற்கும். இந்தப்பகுதி வறட்சி என்ற நிலைக்கு வந்ததே இல்லை. எனவே சுற்றுப்பகுதி வனவிலங்குகள் நீர் அருந்த வருவதும் இந்தப்பகுதிக்குத்தான். அந்த வகையில் காட்டுயானைகள் மட்டும் மாலை முதல் நூற்றுக்கணக்கில் இங்கே வருவதுண்டு. தண்ணீர் சுலமாக கிடைப்பதால் அதை அருந்தி விட்டு சுகமான குளியலையும் போட்டு விட்டு அவை செல்வது வாடிக்கையாக நடக்கும் செயல்.
(காட்டுக்குள் ஓடும் யானை)
தற்போது இந்த சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் போதிய மழையின்றி கடுமையான வறட்சி நிலவி வருகின்றது. காடுகளுக்குள் வனவிலங்குகளின் நீர்த்தேவையை பூர்த்திசெய்யும் இயற்கையான வனக்குட்டைகள், நீரோடைகள் என அனைத்தும் வறண்டு விட்ட காரணத்தினால் யானைக்கூட்டங்கள் தண்ணீர் தேடி காட்டிவிட்டு வெளியேறி தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.
குறிப்பாக சிறுமுகை வனச்சரகதிற்கு உட்பட்ட கூத்தாமண்டி பீட்டில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் தினசரி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து நீர் அருந்திச் செல்கின்றன. அப்படி வந்த கூட்டத்திலிருந்த யானைதான் இப்போது புதைசேற்றில் சிக்கி மீட்கப்பட்டு காட்டுக்குள் விரட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு வாய்க்கால் மாதிரி ஒரு ஆறு செல்கிறது. அது மேல்பகுதி வறண்டு கீழ்பகுதி சேறு மயமாக உள்ளது. இதை எப்போதும் போல் யானைகள் கடந்துள்ளன. அதில் மற்ற யானைகள் எப்படியோ சிக்கி சென்றுவிட இது மட்டும் அகப்பட்டுள்ளது. இதுபோன்ற வாய்க்கால்கள், தண்ணீர் இருந்து சேறாக மாறிக்கிடக்கும் குழிகள் இந்த பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது ஏராளமாய் முளைத்துள்ளன.
அதில் மனிதர்கள் சிக்கினாலே மீட்க முடியாது. யானைகள் சிக்கினால் என்ன ஆகும். இங்கிருந்து 1. 5 கிமீ தூரத்தில் வனத்துறை வாட்ச் டவர் ஒன்று உள்ளது. அதில் 2 வேட்டைத்தடுப்புக்காவலர்கள் காவல் இருந்து வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். அதை விட்டால் ஊருக்குள் செல்வதற்கு 3 கிமீ தூரத்திற்கு மேல் செல்லவேண்டும். இப்படியிருந்தும் புதைசேற்றில் சிக்கிய ஒரு யானை அகப்பட்டு அடுத்த நாளே கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இது கொஞ்சம் மக்கள் பார்வைக்கு படும் பகுதியாக இருந்ததால் பரவாயில்லை. இன்னும் உள்ளே மரங்கள் அடர்ந்த ஆளே செல்லமுடியாத பகுதிக்குள் ஒரு புதைசேற்றுக்குள் யானை மாட்டியிருந்தால் யாருமே பார்க்க முடியாமல் போயிருக்கும். யானை செத்திருந்தால் கூட வெளியே தெரியவராது.
இப்போதைக்கு தற்போது சிக்கிய யானை தெய்வாதீனமாக தப்பி விட்டது. என்றாலும் தினசரி தண்ணீருக்காக நூற்றுக்கணக்கில் இப்பகுதிக்கு வரும் யானைகளுக்கு யார் காவலிருப்பது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால் ரயிலில் அடிபட்டு இறப்பதுபோல், மின்சார வேலியில் சிக்க உயிரைக் கொடுப்பதுபோல் புதைசேற்றில் சிக்கி இறக்கும் யானைகளின் கணக்கும் எண்ணப்படவேண்டியிருக்கும். இந்த விஷயம் வனத்துறையினருக்கும் தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும் இதை எப்படி சரிசெய்வது என்று புரியாமலே அவர்களும் தவித்து வருகிறார்கள். எனவே இதற்கும் மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால் யானைகள் வாழ்வுக்கு மேலும் சிக்கல்தான்!' எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் சிலரிடம் பேசியபோது, 'கடும் வறட்சி காரணமாக பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதிகள் புதைசேறு குழிகளாக, வாய்க்கால்களாக மாறி வருவது உண்மைதான். அதில் யானைகள் சிக்கினால் சிக்கல்தான். இந்த யானையை காப்பாற்றவே படாதபாடு பட்டுவிட்டோம். இப்போது யானை சிக்கிய இடத்தில் சேறும்சகதியுமாக வாய்க்கால் போல் இருக்கும் பகுதியில் கூட மறுபடி யானைகள் அகப்பட்டுக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். எனவே அதை மண் மற்றும் பாறைகள் போட்டு சேறு இல்லாதபடி மூடி சமதளப்படுத்தும்படி யானையை மீட்ட குழுவினர் தெரிவித்து சென்றுள்ளனர். அதை மூடும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதை மூடிவிட்டாலும் அதுபோல் கணக்கில்லாமல் இருக்கும் புதைசேறு குழிகளை என்ன செய்வது. அந்த ஆபத்தை உணராமல் நீர் தேடி வரும் காட்டுயானைகளை என்ன செய்வது என்பது பற்றியெல்லாம் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசித்து வருகிறார்கள்!' எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT