Last Updated : 31 Jan, 2017 04:18 PM

 

Published : 31 Jan 2017 04:18 PM
Last Updated : 31 Jan 2017 04:18 PM

எம்-ஆர் தடுப்பூசி அவசியமா... ஆபத்தா?- ஒரு மருத்துவ பார்வை

எம்-ஆர் தடுப்பூசி - இதுதான் தமிழகத்தின் இன்றைய விவாதப் பொருள் என்றுகூட சொல்லலாம். வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1.8 கோடி குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை வழங்குவதே அரசு சுகாதாரத் துறையின் திட்டம்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், இந்த தடுப்பூசி தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலவற்றை அப்பட்டமான வதந்திகள் என புரிந்து கொள்ள முடிகிறது. சில பதிவுகள் தடுப்பூசிகளே வெளிநாட்டு மருந்து நிறுவனங்களின் ஆதாயத்திற்காகவே என்ற தொணியில் அமைந்திருக்கின்றன. சமூக வலைதளங்கள் இன்று சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் பூதாகரமாக்கும் களமாகவும் ஆக்கப்பட்டிருப்பதால் அவற்றில் வெளியாகும் இன்னும் சில தகவல்களோ படித்தவுடன் பெற்றோரை அச்சப்பட வைப்பதாக உள்ளன.

புற அச்சுறுத்தல்களுக்கும், சுய கேள்விகளுக்குமான விடை தேடலாக மருத்துவர்கள் சிலரை அணுகினோம். மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் கே.குழந்தைசாமி, உலக சுகாதார மையத்தின் தடுப்பு மருந்து நிபுணர் மருத்துவர் சுரேந்தர் ஆகியோர் நம்முடன் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

எம்.ஆர் தடுப்பூசி எதற்காகப் போடப்படுகிறது?

எம்.ஆர் தடுப்பூசி என்பது மீசில்ஸ் - ரூபெல்லா அதாவது தட்டம்மை, விளையாட்டம்மை நோய் தாக்காமல் இருப்பதற்காகப் போடப்படும் ஊசி. 9 மாதம் முதல் 15 வயதிலான குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 1.8 கோடி குழந்தைகளுக்கு எம்ஆர் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என மருத்துவக் குழு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

உலக சுகாதார மையத்தின் தடுப்பு மருந்து நிபுணர் மருத்துவர் சுரேந்தர் நம்மிடம் கூறும்போது, "எம்-ஆர் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாதது. பெற்றோர் எவ்வித தயக்கமும் இல்லாமல் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியை வழங்கலாம். ஒருவேளை தடுப்பூசி தொடர்பாக இன்னும் சந்தேகங்கள் அகலவில்லை என்றால் பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ள 044-24350496, 044-24334811 என்ற எண்களிலோ அல்லது 9444340496 9361482899 ஆகிய மொபைல் எண்களிலோ தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். 104 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு எம்-ஆர் தடுப்பூசி குறித்த தகவல்களைப் பெறலாம். சளி, இருமல், லேசான காய்ச்சல் இருந்தால்கூட இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போடலாம். அதையும் மீறி சந்தேகம் இருந்தால் அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள உடல் நலன் ஏற்புடையதாக இருக்கிறதா என பரிசோதித்துக் கொண்டு, தடுப்பூசி வழங்கலாம்.

முன்னரே இந்த தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்வதால் தவறில்லை. அதனால் பக்க விளைவுகள் ஒன்றும் இருக்காது.

தமிழகத்தில் மட்டுமே இந்த தடுப்பூசி போடப்படுவதாக தவறான தகவல் உலா வருகிறது. இது நாடு தழுவிய திட்டம். போலியோ ஒழிப்பு இலக்கை எட்டிவிட்ட நிலையில் தட்டம்மை, விளையாட்டம்மை ஆகியவற்றை ஒழிப்பதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. எனவே இந்த தடுப்பூசி திட்டம்.

இதுகுறித்து எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். தமிழகத்தைப் போலவே கர்நாடகா, கோவா மாநிலங்களிலும் புதுச்சேரி, லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசங்களிலும் இத்தடுப்பூசி முகாம் நடைபெறவிருக்கிறது.

இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு நாங்கள் வைக்கும் ஒரே கோரிக்கை அரசின் இந்த தடுப்பூசி திட்டத்துக்கு ஒத்துழைத்து எவ்வித தயக்கமும் இல்லாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கி பயனடைய வேண்டும் என்பதே" என்றார்.

இவ்வளவு காலம் போலியோ சொட்டு மருந்து மட்டுமே முகாம்கள் அமைத்து கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது திடீரென இந்தத் தடுப்பூசியை மாநிலம் முழுவதும் முகாம்கள் நடத்தி போட திட்டமிட்டுள்ளதற்கு காரணம் என்னவென்பதே பெரும்பாலானோர் கேள்வியாக இருக்கிறது.

அவர்களின் சார்பில் இந்தக் கேள்வியை நாம் மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் கே.குழந்தைசாமியிடம் முன்வைத்தோம்.

அவர், "இவ்வாறான மருத்துவ முகாம்களை ஒரே நாளில் முடிவெடுத்து நடத்திவிட முடியாது. உலக சுகாதார மையம், யுனிசெப் அமைப்பு, இந்திய அரசு ஒருங்கிணைந்து 6 நோய்களை மிகவும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய்களாக பட்டியலிட்டது. போலியோ, தட்டம்மை, காசநோய், டிப்தீரியா, டெடனஸ் (ரண ஜன்னி), கக்குவான் இருமல் ஆகியனவற்றை குழந்தைகளை கொத்து கொத்தாக வீழ்த்தும் கொடிய நோய்கள் எனப் பட்டியலிட்டது.

போலியோ நோய் இந்தியாவில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் இத்தகைய நோய்கள் தொற்றுநோய் என்பதால் வேறு ஏதாவது நாடுகளில் இருந்து போலியா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து போலியோ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது மீசில்ஸ் எனும் தட்டமையையும், ரூபெல்லா எனும் விளையாட்டம்மையையும் தடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

நாடு முழுவதும் எம்-ஆர் தடுப்பூசியை வழங்குவதற்கான திட்டம் தேசிய தடுப்பூசி திட்ட நிபுணர் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது" என்றார்.

'உங்கள் கேள்வி தரத்தைப் பற்றியதாக இருக்கட்டும்'

அவர் மேலும் கூறும்போது, "அரசின் தடுப்பூசி திட்டத்தை கேள்வி கேட்பவர்கள் இது தரமானதா என்று கேள்வி எழுப்பினால் அது எவ்வளவு தரமானது, எத்தகைய சுகாதாரமான சூழலில் வழங்கப்படுகிறது என்ற ரீதியில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டால் அது ஆரோக்கியமானது. தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படுவதிலிருந்து அவற்றை பாதுகாப்பது, குழந்தைகளுக்கு வழங்குவது வரை எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொள்கிறது என்பதை விளக்கமுடியும்.

தமிழகம் முழுவதும் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் ஐஸ்லைன் ரெப்ரிஜெரேட்டர் வசதி இருக்கிறது. தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னர் மருத்துவ குழுக்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏதாவது அவசரநிலை ஏற்பட்டால் சமாளிக்க மருத்துவர்களுடன் தான் இத்தகைய முகாம்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதைவிடுத்து, தடுப்பூசியே ஏன் என்ற ரீதியிலான கேள்விகள் அர்த்தமற்றவை" என்றார்.

தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் ஆபத்தானது

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கக்கூடாது என்று ஒரு சாரார் பிரச்சாரமாகவே முன்னெடுத்து வரும் நிலையில் இது குறித்து மருத்துவர் கே.குழந்தைசாமி, "தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் ஆபத்தானது. அறியாமையின் வெளிப்பாடு. நம் பாட்டிகளையும், பாட்டன்களையும் கேட்டால் தடுப்பூசி எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என்பதைக் கூறுவார்கள். ஏனெனில் அவர்கள் காலத்தில் பெரியம்மைக்கு கொத்து கொத்தாக மக்கள் மாண்டனர். போலியாவால் தங்கள் குழந்தைகள் கை, கால் ஊனமாவதை காணும் அவலம் இருந்தது. கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படும் அவதியைக் கண்டிருப்பார்கள்.

ஆனால், இன்று அரசு இலவசமாக குழந்தைகளுக்கு பல்வேறு தடுப்பூசிகளைப் போடுகிறது. போலியோ போன்ற சொட்டு மருந்துகளை வீடு தேடி வந்து வழங்குகின்றனர். எனக்குத் தெரிந்த முதியோர் பலர் தடுப்பூசிகளை வரவேற்றுள்ளனர். நான் தேனி, போடி பகுதிகளில் போலியோ தடுப்பு முகாம்களுக்குச் சென்ற போதெல்லாம் பிரச்சாரத்துக்கு ஒருவர் வருவார். அவர் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தனது பாதிப்பைக் காட்டி என்னைப் போல் உங்கள் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில் போலியோ தடுப்பூசி போடுங்கள் என விளக்கிக் கூறுவார்.

என் குழந்தைக்கு தடுப்பூசி வழங்கமாட்டேன் எனக் கூறுவதுகூட ஒருவகையில் குழந்தைகள் உரிமையை பறிப்பதாகும். இயற்கை உரங்களை நாம் வரவேற்கலாம், இயற்கை உணவுக்கு திரும்பலாம் ஆனால் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலகட்டத்தில் விஞ்ஞானத்தின் வரங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் மூலம் நிரந்தர பாதிப்பையோ அல்லது உயிரையே பறிக்கக்கூட நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றால் அத்தகைய தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள நாம் ஏன் அச்சப்பட வேண்டும்? அநாவசியமாக ஏன் வாத விவாதங்களுக்குள் செல்ல வேண்டும்?" என தடுப்பூசி தொடர்பாகவும் குறிப்பாக எம்-ஆர் தடுப்பூசி குறித்தும் பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

எதிர்ப்பின் பின்னணியில் வணிக நோக்கம்?

பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் எம்-ஆர் தடுப்பூசிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுதான் வருகின்றன. 2014-ல் வங்கதேசத்தில் 5.6 கோடி குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பூசிகளால் இதுவரை எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இந்நிலையில், தட்டம்மை, விளையாட்டம்மையை முற்றிலுமாக இந்தியாவிலிருந்து ஒழிப்பது கடமை என அரசு எடுத்துள்ள முயற்சிக்கு பின்னணியில் வணிக ரீதியிலான காரணங்கள் இருக்கலாம் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அரசே இலவசமாக இத்தடுப்பு மருந்துகளை வழங்குவதால் இதில் தனியார் ஆதாயம் அடைய முடியாது என்பதாலும் சில வதந்திகளைக் கிளப்ப வாய்ப்பிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசியில் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை மருத்துவர்களிடம் கேட்டறிந்து கொண்டு இளைய தலைமுறையை நோயிலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் தார்மீகக் கடமை. அதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ளும்போது உரிய ஒத்துழைப்பை நல்குவதும் குடிமக்களின் கடமை.

பாரதி ஆனந்த். தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x