Published : 17 Nov 2014 11:28 AM
Last Updated : 17 Nov 2014 11:28 AM

உயரமான தார்சாலைகளால் வீடுகளுக்குள் புகும் மழைநீர்: புத்தகரம், சூரப்பட்டு பகுதிகளில் பொதுமக்கள் அவதி

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட புத்தகரம், சூரப்பட்டு போன்ற பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கடந்த 2011-ல் சென்னை மாநகரப் பகுதியை ஒட்டிய, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அவ்வாறு இணைக்கப்பட்ட பகுதியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புத்தகரம், சூரப்பட்டு ஆகிய ஊராட்சிகளும் அடங்கும்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஒரு அடிக்கும் அதிகமான உயரத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் மழை நீர் வழிந்தோடாமல் வீடுக ளுக்குள் புகுந்துள்ளது. மழை நின்று 3 நாட்கள் ஆகியும், மழைநீர் வடியாமல் வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ளது. மேலும் வீடுகளில் மழைநீர் ஊற்றெ டுக்கிறது. இதனால் அவதிப்பட்டு வரும் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். சிலர் தற்காலிகமாக மாடிகளில் கொட்டகை அமைத்து அதில் தங்குகின்றனர். தேங்கியிருக்கும் மழைநீர் காரணமாக அப்பகுதியில் கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன.

இது குறித்து அப்பகுதி சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகள் வெட்டியெடுக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி வி.கமலநாதன் கூறியதா வது:

இப்பகுதியில் இதுநாள் வரை வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அமைக் கப்பட்ட உயரமான சாலை காரணமாகவே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் விரைவில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் முடிந்த பிறகு புதிய சாலையை மாநகராட்சி அமைத்திருக்கலாம். அல்லது ஏற்கெனவே உள்ள சாலையை பெயர்த்துவிட்டாவது புதிய சாலையை அமைத்திருக்கலாம். இவை எதையும் செய்யாததால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்பகுதியில் வசிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் இதுபற்றி கூறும்போது, “கடந்த 2012-13 நிதியாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகரப் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டத்தை செயல்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது கூட மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இடையே புரிந்துணர்வு இல்லா ததால், குடிநீர் வாரியம் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக மாநகராட்சி சாலை அமைத்து பணத்தை வீணடித்துள்ளது” என்றார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “24-வது வார்டு மாநகராட்சியுடன் சேர்ந்து 3 ஆண்டுகள்தான் ஆகிறது. படிப்படியாக அங்கு பணிகள் மேற்கொள்ளப்படும். அரசின் விதிகளின்படி, நெடுஞ் சாலைகளுக்கு இணையாக அப்பகுதியில் சாலை அமைக்கப் பட்டதால் சற்று உயரமாக இருக்கிறது. மழைநீர் வடிகால் உள்ளிட்ட திட்டங்களை செயல் படுத்தும்போது இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x