Last Updated : 13 Jul, 2016 01:32 PM

 

Published : 13 Jul 2016 01:32 PM
Last Updated : 13 Jul 2016 01:32 PM

ஊகத்தின் அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

அனுமானம், அச்சம், ஜோதிடம், ஊகம் ஆகியவற்றின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஒருவரின் 18 வயதுக்கு உட்பட்ட மகளை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றதாக, திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இருவரையும் கண்டுபிடித்து, மதுரை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இளைஞரை சிறார் சிறையிலும், மனுதாரரின் மகளை அரசு காப்பகத்திலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தன்னுடன் மகளை அனுப்பக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “நீதிமன்றத்தில் மகள் ஆஜர்படுத்தப்பட்டபோது, மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மனு செய்தேன். எனது மகளும் வரத் தயாராக இருந்தார். ஆனால், அவரை ஆணவக் கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறி, அரசு காப்பகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி. தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தனது மகளை ஏற்கத் தயாராக இருந்தார். மகளும், தந்தையுடன் செல்லத் தயாராக இருந்துள்ளார்.

ஆனால், நீதிபதி தயாராக இல்லை. அனைத்துப் பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை கொலை செய்துவிடுவார்கள் என கருதி, கூர்நோக்கு இல்லங்களுக்கு பிள்ளைகளை அனுப்பினால் கூர்நோக்கு இல்லங்கள் நிரம்பி வழியும். மகளுக்கு பெற்றோரால் ஆபத்து உள்ளது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, பெண்ணை அரசுக் காப்பகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அவ்வாறு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பெற்றோருடன் செல்ல, அந்தப் பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். அவரை பெற்றோரும் ஏற்கத் தயாராக உள்ளனர்.

கீழமை நீதிமன்றங்கள் அனுமானம், அச்சம், ஜோதிடம், ஊகம் ஆகியவற்றின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது. ஊடகங்களின் தலைப்புச் செய்திகளை கருத்தில்கொண்டும் உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது.

மனுதாரர் மகள் காப்பகத்தில் கடும் மன ஊளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அவருக்கு தற்போது பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, ஆலோசனை தேவை.

இதனால் மனுதாரரின் மகளுக்கு ஏதாவது நேர்ந்தால், நாங்கள்தான் பொறுப்பு என எழுதி வாங்கிக்கொண்டு, மனுதாரருடன் அவரது மகளை அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x