Published : 08 Oct 2013 05:26 PM
Last Updated : 08 Oct 2013 05:26 PM

ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: சங்கரராமன் மகன் சாட்சியம்

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்துடன் தொடர்புடையவர் ராதா கிருஷ்ணன். இவர் 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உள்பட 12 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி என்.தண்டபாணி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, காஞ்சிபுரம் கோயிலில் கொலையான சங்கர ராமனின் மகன் ஆனந்த் சர்மா ஆஜராகி ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியம் அளித்தார்.

“காஞ்சிபுரம் மடத்தில் நடைபெற்ற பல தவறுகளை எனது தந்தையார் சங்கரராமன் தட்டிக்கேட்டார். இதனால் ஜெயேந்திரருக்கும், எனது தந்தையாருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டது.

மடத்தில் நடைபெறும் தவறுகள் தொடர்பாக சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் பலருக்கு என் தந்தை கடிதங்களை எழுதினார்.

ஆனால் ராதாகிருஷ்ணன்தான் இந்தக் கடிதங்களை எழுதுவதாக நினைத்து அவரை ஜெயேந்திரர் ஆட்கள் தாக்கினர்" என்று ஆனந்த் சர்மா கூறினார்.

விசாரணையின்போது ரவி சுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேர் ஆஜரானார்கள். விசாரணையை இம்மாதம் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x