Published : 07 Jan 2014 02:55 PM
Last Updated : 07 Jan 2014 02:55 PM

அழகிரி கருத்துக்கு கருணாநிதி கடும் கண்டனம்: கட்டுப்பாட்டைக் குலைத்தால் ஒழுங்கு நடவடிக்கை

திமுக - தேமுதிக உறவு குறித்த மு.க.அழகிரியின் கருத்துக்கு, திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்று, கருத்து மாறுபாடுகளை வெளியிடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மதுரையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு, தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர், மு.க.அழகிரி கடந்த 5ஆம் தேதியன்று அளித்த பேட்டி பற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில் வருமாறு:

திமுகவும், தேமுதிகவும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி சேரும் வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.

திமுகவோடு, தேமுதிக கூட்டணிக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான் என்று நான் சொன்னதையே பொறுத்துக் கொள்ள முடியாமல், எங்கே அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், தவறான விமர்சனக் கணைகளைத் சிலர் தொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்தப் பத்திரிகையாளர்கள் தேமுதிகவோடு தேர்தல் உறவு வேண்டாம் என்று மு.க.அழகிரி கூறியதாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளனர். அந்தச் செய்திக்கும் அல்லது அழகிரி அப்படி கூறியிருந்தால் அந்தக் கருத்துக்கும், திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனெனில், எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி சேருவது என்று தீர்மானிக்கும் உரிமை, திமுக செயற்குழு, பொதுக்குழு அல்லது அந்தக் குழுக்களால் அதிகாரம் தரப்பட்ட கழகத்தின் தலைமைக்கு மட்டுமே உள்ளது.

அந்த வகையில், தேமுதிகவுக்கும், திமுகவுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான் என்று, திமுக தலைவர் என்ற முறையில், நான் சொன்ன கருத்துக்கு மாறாக மு.க.அழகிரியின் பேட்டி அமைந்திருப்பது வருந்தத்தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்.

இது போன்ற தேவையில்லாத கருத்து மாறுபாடுகளை வெளியிட்டு, கழகத்தின் கட்டுப்பாட்டைக் குலைக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு,

கழகத்தின் உறுப்பினர் பொறுப்பிலி ருந்தே ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பதை, மிகவும் கண்டிப்பாக தெரிவித்துக் கொள்வதோடு, இந்த முடிவு, நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் திமுகவினர் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாகும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x