Published : 20 Apr 2017 03:24 PM
Last Updated : 20 Apr 2017 03:24 PM

சுழல் விளக்கை அகற்றினால் மட்டும் போதுமா?

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கார்களில் இருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட வேண்டும் என்ற மோடி அமைச்சரவையின் முடிவையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கள் வாகனங்களிலிருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றியுள்ளனர்.

இது முன்மாதிரியான செயலா? இதனால் மக்களுக்கும் அதிகாரத்துக்குமான இடைவெளி குறையுமா? சுழல் விளக்குகள் எந்தளவுக்கு முக்கியமானவை? இதை அதிகாரிகள் எப்படிப் பார்க்கின்றனர்?

இதுகுறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தேவசகாயம் மற்றும் கிறிஸ்து தாஸ் காந்தி இருவரிடமும் பேசினோம்.

மாஃபியா கும்பலுக்கு விழுந்த அடி: தேவசகாயம்

எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றி இருப்பது அருமையான தொடக்கம். வரவேற்கத்தக்க செயல் இது. சில தீவிரவாத கும்பல்கள் சுழல் விளக்கைப் பொருத்திக்கொண்டு மக்களை மிரட்டிக் கொண்டிருந்தன.

ஏன் மாஃபியா கும்பல்கள்கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களில் சிவப்பு சுழல் விளக்குகளைப் பொருத்திக் கொண்டனர். அவர்கள் சாலையில் செல்லும்போது உயரதிகாரிகள் என்று போக்குவரத்து காவலர்களே சல்யூட் அடித்த நிகழ்வுகளும் உண்டு.

இதுபோன்ற நபர்கள்தான் தேர்தல் நேரங்களிலும் முறைகேடான பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டனர். இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீதிபதிகளுக்கு எதற்கு சுழல் விளக்குகள்?

சுழல் விளக்குகள் அவசர காலத் தேவைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. வீட்டில் இருந்து நீதிமன்றத்துக்கும், நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கும் திரும்பும் நீதிபதிகளுக்கு எதற்கு சிவப்பு சுழல் விளக்குகள்? காவல் துறையிலேயே, குற்றவியல், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவினருக்கு மட்டுமே சுழல் விளக்குகள் தேவைப்படும்.

ஆனால் அவை குறித்த விதிகளை யாரும் வரைமுறைப் படுத்தவில்லை. இதனால் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும், அதிகாரிகளும், நீதிபதிகளும் இவற்றைத் தங்குதடையின்றிப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து அவசர காலங்களில் இன்றியமையாத தேவையான ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் போலீஸ் வாகனங்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின. இந்த அறிவிப்பால் அவை விரைவாகச் செயல்படும். பொதுமக்களும் நிம்மதியுடன் சாலையில் சென்று வரமுடியும். வாகன நெரிசல் குறையும்.

தலைக்கனம் குறையும்: கிறிஸ்து தாஸ் காந்தி

இந்த அறிவிப்பின் மூலம் பலரின் தலைக்கனம் குறைந்திருக்கும் என்று நம்புகிறேன். எத்தனை எத்தனை சைரன்கள், சுழல் விளக்குகள்? 2000 ஆண்டு வரையிலும் இத்தனை சுழல் விளக்குகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பயன்பாட்டில் இல்லை.

ஜெயலலிதா அரசியலில் நுழைந்தபிறகே விஐபி பாதுகாப்பு வேறு தளத்துக்குச் சென்றது. அதற்கு முன்பு வரை முதல்வர் பாதுகாப்புக்காக அதிகபட்சம் இரு வண்டிகள் மட்டுமே சென்றன. ஜெயலலிதாவுக்கு வெளியில் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முதல்வரான கருணாநிதியும் அதிகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

அதைத் தொடர்ந்து ஏராளமான அதிகாரிகளும் சுழல் விளக்குகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தீவிரவாத அச்சுறுத்தல் என்று கூறிக்கூறியே அரசியல்வாதிகளும் சுழல் விளக்குகளைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தினர். அதற்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் காரணமல்ல. அவர்கள் செய்த தவறுகளை மூடி மறைக்கவே அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

ஆடம்பரச் செருக்கு

அனாவசியமான நேரங்களில் செயல்படும் சுழல் விளக்குகள், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் இருந்து மக்களைத் தொலைவில் இருக்கச் சொல்லும் செயல். மக்களிடம் இருந்து நாங்கள் வெகுதூரத்தில் இருக்கிறோம், இருப்போம் என்று விடுக்கும் எச்சரிக்கை; ஆடம்பரச் செருக்கு.

இந்த விளக்குகளின் மூலம் போக்குவரத்து வன்முறை ஏவப்படுகிறது. தெரியாமல்தான் கேட்கிறேன். அமைச்சர்களுக்கும், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் என்ன அவசரம்? பொறுத்து செல்லலாமே.

நான் ஆட்சியராக இருந்தபோது அளிக்கப்பட்ட வண்டியில் சுழல் விளக்குகளைப் பொருத்த அனுமதித்ததில்லை. தவிர்க்க இயலாத நேரங்களில் பயன்படுத்த, அவற்றை ஓட்டுநர் வண்டியில் வைத்து எடுத்து வருவார்.

ஒரு முதலமைச்சருக்கு என்ன அவசரம் இருக்கமுடியும்? அவர் வருவதுதான் நேரம். அதனால் எடப்பாடி பழனிசாமியின் செயல் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் சுழல் விளக்குகள் அகற்றம் மட்டுமே போதுமானதாக இருக்காது.

பாதுகாப்பு வாகனங்கள், சைரன் வண்டிகள் பறக்க, பாதுகாவலர்கள் புடைசூழ ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் செல்வது குறைய வேண்டும். ஆட்சிமுறை குறித்த வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே அதிகாரத்துக்கும் சாமானியருக்கும் இடையேயான இடைவெளி நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x