Published : 20 Jun 2015 08:32 AM
Last Updated : 20 Jun 2015 08:32 AM

‘ஜெயலலிதாவைவிட கருணாநிதி எவ்வளவோ மேல்!’: அகில இந்திய மூமுக தலைவர் டாக்டர் ந.சேதுராமன் பகிரங்க ஒப்புதல்

“ஜெயலலிதாவைவிட கருணாநிதி எவ்வளவோ மேல்” என்று மூவேந் தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ’தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

ஜாதி கட்சிகளை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இதில் உண்மையில்லை. ஜாதி அரசியலை வைத்துதான் திமுக- வும் அதிமுக-வும் ஓட்டு வாங்கு கின்றன. எந்த ஜாதியினர் அதிகமாக இருக்கிறார்கள் என்று பார்த்து அந்த ஜாதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துகிறார்கள். அந்தப் பகுதியில் ஒரு ஜாதி கட்சி வலுவாக இருந்தால் அந்த ஜாதி யைச் சேர்ந்த ஒருவரை பிடித்து புதிதாக ஒரு ஜாதி கட்சியைத் தொடங்க வைத்து அந்தக் கட்சியையும் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குகிறார்கள்.

இம்முறை அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்பதாக திட்டம்?

ஐந்து தொகுதிகள் அல்லது நாங்கள் விரும்பும் மூன்று தொகுதி களை கேட்போம். இதற்கு ஒத்து வராவிட்டால் கூட்டணியில் இருக்க மாட்டோம். நாங்கள் இப்படி கண்டி ஷன் போடுவது ஜெயலலிதாவுக் கும் அதிமுக-வுக்கும் பிடிக்காது. 2006 தேர்தலில் எங்களுக்கு 10 தொகுதிகளைத் தருவதாக சொல்லி எங்களை வேறெங்கும் போகவிடாமல் தடுத்துவிட்டு கடைசியில், ’சீட் இல்லை’ என கைவிரித்துவிட்டார்கள்.

ஒரு கட்சியின் தலைவரான நீங்கள் ‘புரட்சி தலைவி, அம்மா’ என்றெல்லாம் அழைக்கும் அளவுக்கு இறங்கிப்போக வேண்டுமா?

அப்படி இறங்கிப் போனாலாவது எங்களை கவனிப்பார்களா என்ற எதிர்பார்ப்புதான். அங்கே, காலில் விழுபவர்களுக்குத்தானே மரி யாதை கொடுக்கிறார்கள். நாங்கள் மட்டும்தான் அந்த அளவுக்கு போக வில்லை.

ஊழலுக்கு எதிராக, தனி இயக்கம் ஆரம்பித்த நீங்கள் ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான அதிமுக கூட்டணியில் நீடிப்பது கொள்கை முரண்பாடு இல்லையா?

நிச்சயம் முரண்பாடுதான். ஆனால், நாங்கள் இப்படி இல்லை என்றால் என்னையும் இன்னொரு டிராஃபிக் ராமசாமி ஆக்கிவிடுவார் கள். அதனால்தான் ரெட்டை வேடம் போடுகிறேன். அரசியலில் ரெட்டை வேடம் போடுவது சகஜம். ஏன், கருணாநிதியும் ஜெயலலிதாவும் ரெட்டை வேடம் போடவில்லையா?

ஆர்.கே.நகர் தொகுதியில் ’ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்’ என்று உங்க ளால் பிரச்சாரம் செய்ய முடியுமா?

ஆர்.கே.நகரில் அதிமுக-வுக்கு எந்த சிக்கலும் இல்லை. அப்புறம் எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று தெரிய வில்லை. இப்போது போய் நான், ’ஓட்டுக்கு காசு வாங்காதே’ என்று சொன்னால் என்னை கல்லால் அடிப்பாங்க. ஏற்கெனவே திரு மங்கலத்தில் எனக்கு அந்த அனுப வம் இருக்கு. எனவே, மனசாட் சிக்கு விரோதமாக அங்கே பிரச்சாரத் துக்கு போக விரும்பவில்லை.

அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத் துத் துறையிலும் முடங்கிவிட்டது என்கிறார்களே..?

நூற்றுக்கு நூறு உண்மை. காரணம், இவர்கள் தங்களுக்காக ஆட்சி செய்கிறார்கள். இந்த விஷயத்தில் ஜெயலலிதா பெரிய வியாபாரி கருணாநிதி சின்ன வியாபாரி.

உங்களுடைய பழைய கூட்டாளி திருமாவளவன் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறாரே?

அவருடைய முயற்சியைப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். ஆனால், திமுக-வும் அதிமுக-வும் சாமானியத்தில் அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிடமாட்டார்கள். ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடியை கொட்டும் காமதேனுவை அவர்களிடமிருந்து கைப்பற்றுவது அவ்வளவு சுலபமில்லை.

அடுத்த ஆட்சி எங்களுடையதுதான் என்கிறாரே மருத்துவர் ராமதாஸ்?

இந்த ஆண்டின் உலக மகா ஜோக் இதுதான். வெறும் 4 சதவீத ஓட்டுகளை வைத்துக் கொண்டு இப்படிப் பேசுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.

கடந்த 4 ஆண்டு அதிமுக ஆட்சியில் நீங்கள் கண்ட பலன்தான் என்ன?

எதுவுமில்லை. எங்களுடைய கொள்கைபரப்புச் செயலாளரின் மனைவி சிவகங்கை அருகே ஒரு கிராமத்தில் ஆசிரியராகப் பணி செய்கிறார். அவருக்கு சென்னைக்கு மாறுதல் கேட்டு அமைச்சர் அலுவலகத்துக்கு பத்து முறைக்கு மேல் நடந்துவிட்டேன். நான்கு லட்சம் கொடுத்தால்தான் மாறுதல் கிடைக்கும் என்கிறார்கள். இதுதான் இன்றைய தமிழகத்தின் யதார்த்தம். ஆனால், இதுமாதிரி யான விஷயங்களில் ஜெயலலி தாவைவிட கருணாநிதி எவ்வளவோ மேல். ’செய்கிறேன்’ என்றால் கட்டா யம் அதை செய்து கொடுப்பார்.

மருத்துவரான நீங்கள் ஜெயலலிதா விடம் எடுத்துச் சொல்லி மதுவிலக்கு கொண்டுவர முயற்சிக்காதது ஏன்?

நாங்கள் இப்போது ஜெயலலிதா விடம் அடிமையாக இருக்கிறோம். அதனால் எங்களால் எந்தப் பிரச்சி னைக்கும் அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x