Last Updated : 17 Jan, 2017 10:31 AM

 

Published : 17 Jan 2017 10:31 AM
Last Updated : 17 Jan 2017 10:31 AM

200 படுக்கைகளுடன் தேசிய முதியோர் மையம்: சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 2018 மார்ச்சில் பணிகளை முடிக்க திட்டம்

கிண்டியில் உள்ள ‘கிங்’ நோய் தடுப்பு மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 200 படுக்கைகளுடன் தேசிய முதியோர் மையக் கட்டிடம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

சென்னை கிண்டியில் ‘கிங் இன்ஸ்டிடியூட்’ என்ற பெயரில் நோய் தடுப்பு மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந் துள்ளது. இங்கு பாம்புக்கடி உட்பட பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. புதிய நோய்களுக்கு மருந்து கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. இதுதவிர மாணவ, மாணவியருக்கான மருத்துவ முதுநிலை படிப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப் படுகின்றன.

இந்த வளாகத்தில், ‘தேசிய முதியோர் மையம்’ அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த மையத் துக்கான கட்டுமானப் பணியை தமிழக பொதுப்பணித் துறை மேற்கொள்கிறது. இதற்கான அனு மதியை கடந்த ஆண்டில் தமிழக சுகாதாரத் துறை வழங்கியது. இதையடுத்து தேசிய முதியோர் மையக் கட்டிடம் ரூ.78 கோடி செலவில் 8.64 ஏக்கரில் 4 தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

மையத்தின் தரைகீழ் தளத்தில் எலும்பு முறிவு புறநோயாளிகள் பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, நடமாடும் எக்ஸ்ரே யூனிட், ரத்த வங்கி, தொற்றுவகை நோய் பரிசோதனைக் கூடம் ஆகியவை கட்டப்படுகின்றன. தரைத் தளத்தில் காது, மூக்கு, தொண்டை புறநோயாளிகள் பிரிவு, பல் சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, இதயயியல் புறநோயாளிகள் பிரிவு, கண் சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், தியானம், கலந்தாய்வு, மனோதத்துவ புறநோய் பிரிவு உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

முதல் தளத்தில் 4 அறுவை சிகிச்சை அரங்குகள், இயக்குநர் அலுவலகம், உள்ளுறை மருத்து வர் அலுவலகம், மருத்துவ கண் காணிப்பாளர் அறை, செவிலியர் கண்காணிப்பாளர் அறை, டயாலி ஸிஸ் யூனிட் ஆகியவையும் இரண்டாம் தளத்தில் கூட்ட அரங்கம், பயிற்சி மையம், சிறிய கூட்ட அரங்கம், பணம் செலுத்தும் சிகிச்சை வார்டு, தேர்வு அறை ஆகியவையும், மூன்றாம் தளத் தில் 30 படுக்கைகள் கொண்ட 5 மருத்துவ வார்டுகள், யோகா மற்றும் தியான அறைகள் கட்டப் படுகின்றன. 4 தளங்களிலும் மொத்தம் 200 படுக்கைகள் இடம் பெறுகின்றன.

மேலும், ஆராய்ச்சி மாணவர்கள், பயிற்சியாளர்கள், செவிலியர்கள் என மொத்தம் 204 பேர் தங்குவதற்கான வசதிகளுடன் விடுதிக் கட்டிடமும் கட்டப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள பாதை, அனைத்து தளங்களையும் இணைக்கும் சாய்தளம், நவீன படுக்கைகள், லிப்ட், தோட்டம், வாகன நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடன் தேசிய முதியோர் மையக் கட்டிடம் கட்டப்படு கிறது.

‘‘கட்டுமானப் பணிகள் சுமார் 30 சதவீதத்துக்குமேல் முடிவடைந் துள்ளன. 2018 மார்ச் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மை யம் பயன்பாட்டுக்கு வரும்போது முதியோருக்கு அனைத்து வகை யான மருத்துவ சிகிச்சை களும் கிடைக்க வழிவகை ஏற்படும்’’ என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x