Published : 04 Jun 2017 12:37 PM
Last Updated : 04 Jun 2017 12:37 PM
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், தூத்துக்குடியில் புத்தகப்பை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களின் விற்பனை இன்னும் விறுவிறுப்பை எட்டவில்லை. இதனால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜூன் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஜூன் 8-ம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து அடுத்த கல்வியாண்டுக்கு வகுப்புகள் தொடங்கத் தயாராக உள்ளன.
பள்ளிப் பொருட்கள்
புதிய கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லும் போது புத்தகப் பை, சாப்பாட்டுப் பை, தண்ணீர் பாட்டில், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை புதிதாக கொண்டு செல்ல விரும்புவர். இதனால், பள்ளிகள் திறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை பெற்றோர் வாங்கத் தொடங்குவர். இதன் காரணமாக தூத்துக்குடி கடை வீதிகளில் வழக்கமாக மே 20-ம் தேதிக்கு மேல் பள்ளிப் பொருட்கள் விற்பனை களை கட்டும்.
விறுவிறுப்பில்லை
ஆனால், இந்த ஆண்டு பள்ளிகள் திறக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பள்ளிப் பொருட்களின் விற்பனை விறுவிறுப்பை எட்டவில்லை. தூத்துக்குடி மாநகரில் உள்ள கடைகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேவைப்படும் ஏராளமான பொருட்களை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளனர். ஆனால், விற்பனை மந்தமாக இருப்பதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடியில் உள்ள பிரபல பள்ளி பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.முருகேசன் கூறும்போது, ‘‘கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பள்ளிப் பொருட்கள் விற்பனையில் மந்த நிலை காணப்படுகிறது. இதற்கு சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமா அல்லது கடும் வறட்சி காரணமா எனத் தெரியவில்லை. மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் இருந்து புதிய வடிவங்களில் ஏராளமான பொருட்களை நாங்கள் வாங்கி வைத்துள்ளோம். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை.
புது வரவுகள்
பள்ளிப் பொருட்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. புத்தகப் பைகளை பொறுத்தவரை இந்த ஆண்டு பல புதிய மாடல்கள் வந்துள்ளன. மழை கவரோடு வந்துள்ள புத்தகப் பைகள் மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
தற்போது உள்ளூர் தயாரிப்பு பைகளை விட, கம்பெனி பைகளைத் தான் மாணவர்களும், பெற்றோரும் விரும்பி வாங்குகின்றனர். இவை குறைந்த பட்சம் ரூ.300 முதல் அதிகம் பட்சம் ரூ.3,000 வரையான விலையில் உள்ளன. சாப்பாட்டு பைகள் ரூ.60 முதல் ரூ.350 வரையிலான விலையிலும், லஞ்ச் பாக்ஸ் ரூ.50 முதல் ரூ.700 வரையும் விற்பனைக்கு உள்ளன.
1,500 வகை பாட்டில்கள்
பல்வேறு வடிவம் மற்றும் நிறங்களில் 1,500 வகையான தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ரூ.25 முதல் ரூ.300 வரையிலான விலையில் கிடைக்கின்றன. பென்சில் பாக்ஸ் ரூ.25 முதல் ரூ.500 வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பவுச் ரூ.20 முதல் ரூ.300 வரை பல வடிவங்களில் கிடைக்கிறது. கடந்த ஆண்டும் தொடக்கத்தில் இதேபோல தான் விற்பனை மந்தமாக இருந்தது. பின்னர், கடைசி 3 நாட்களும் நன்றாக இருந்தது.
அதுபோல இந்த ஆண்டும் வரும் நாட்களில் விற்பனை இருக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT