Published : 24 Sep 2013 06:54 AM Last Updated : 24 Sep 2013 06:54 AM
உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்துக்கு ரூ.437 கோடி சேமிப்பு
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.436 கோடியே 83 லட்சம் சேமிப்பாக கிடைக்கும் என்று காங்கிரஸ் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.
ஹரியாணா மாநில பொதுப்பணித் துறை அமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறப்பு பிரதிநிதியுமான ரந்தீப்சிங் சுர்ஜேவாலா சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு திங்கள்கிழமை வந்தார்.
அப்போது அங்கு நடந்த நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியமர்வு சட்டம் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
சமூக நீதி, சமத்துவம் நாட்டில் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், பணி உரிமைச் சட்டம், வன உற்பத்தி உரிமைச் சட்டம், பெண்களுக்கான சொத்து உரிமைச் சட்டம், நில ஆர்ஜிதம் மற்றும் நியாயமான இழப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்தல், மறுவாழ்வு, மறுகுடியமர்வு சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
நில ஆர்ஜித சட்டம் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள நில ஆர்ஜித சட்டத்தின்படி, நகர்ப்புறத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும்போது, நிலத்தின் உரிமையாளருக்கு சந்தை விலையைப் போல இருமடங்கு தொகை இழப்பீடாக தரப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 30 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை ஆறுதல் தொகையும் சேர்த்து கிடைக்க வழிவகுக்கிறது. இந்த சட்டத்தின்படி, கிராமப்புறத்தில் கையகப்படுத்தும் நிலத்துக்கு நில உரிமையாளர்கள் சந்தை விலையைப் போல 2 முதல் 4 மடங்கு வரை அதிகமாக இழப்பீடு பெற முடியும்.
நில ஆர்ஜித சட்டங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு, இந்த சட்டம், நிலம் கொடுத்தவர்களுக்கு புனரமைப்பையும், மாற்று குடியிருப்பையும் பெற வழிவகுக்கிறது. உணவுப் பாதுகாப்பு சட்டம் நாட்டில் உள்ள 121 கோடி பேரில், 82 கோடி பேர் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தால் பயன்பெறுவர். நகர்ப்புறத்தில் 50 சதவீதம் பேரும், கிராமப்புறத்தில் 75 சதவீதம் பேரும் பயனடைவர்.
இந்த சட்டத்தின் மூலம் 82 கோடி பேருக்கு தலா 5 கிலோ வீதம் மொத்தம் 72.6 மில்லியன் டன் உணவு தானியங்கள் வழங்கப்படும். இதற்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 747 கோடி செலவாகும். இந்த சட்டத்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.436 கோடியே 83 லட்சம் சேமிப்பாக கிடைக்கும் என்றார்.
பேட்டியின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி., தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத் உடனிருந்தனர்.
WRITE A COMMENT