Published : 06 Feb 2017 04:31 PM
Last Updated : 06 Feb 2017 04:31 PM
தமிழக அரசின் நிலையற்ற தன்மை வருத்தமளிக்கிறது என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றாகச் செயல்படும் நிலையில், அவரை மாற்றுவது மாநிலத்தையே பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய தமிழிசை, ''ஜெயலலிதாவின் மறைவில் அரசியல் லாபம் அடைய ஆசைப்பட்டோம் என்று கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அரசின் ஸ்திரத் தன்மையைக் குறித்து நாங்கள் வருந்திக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, ஆளுங்கட்சிக்கு நாங்கள் ஏன் சிக்கலை உருவாக்க வேண்டும்?
அதிமுக எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் நன்றாகச் செயல்படும் நிலையில், முதல்வரை மாற்றுவது மாநிலத்தையே பாதிக்கும்'' என்றார்.
அதே நேரத்தில் ஹெச். ராஜா 'தி இந்து'விடம் பேசும்போது, ''தமிழக அரசியல் மாற்றங்களின்போது பாஜக நடுநிலைத் தன்மையுடனே இருக்கிறது. சசிகலாவின் கணவர் நடராஜன், பாஜக, மாநிலத்தை காவி மயமாக்க முயற்சிக்கிறது என்று கூறியிருந்தார். ஆமாம் எங்களின் நோக்கம் காவிமயமாக்குவதுதான். பாஜகவினர் நாட்டுக்கு கருப்பு வர்ணம் பூசவோ, சிவப்பு, வெள்ளை வர்ணங்கள் அடிக்கவோ வரவில்லை. எல்லா அரசியல் கட்சிக்கும் அவர்களின் அடிப்படையை பலப்படுத்துவதிலேதான் கவனம் இருக்கும்.
முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை மூலம், அதிமுகவில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்தது என்பது தவறு.
தமிழ்நாட்டு மக்கள் மன்னார்குடி குடும்பத்தினர் அனைத்து விவகாரங்களிலும் தலையிடுவதைக் கண்டு அச்சமடைந்துள்ளனர். மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அதிமுகவினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் புகைப்படத்தையே வைத்திருந்தனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT