Published : 15 Feb 2017 10:47 AM
Last Updated : 15 Feb 2017 10:47 AM
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை வரவேற்றுள்ள உடுமலை தொகுதி தொண்டர்கள், பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உடுமலை குட்டைத்திடலில் சாலையோரமாக பல ஆண்டுகளாக சைக்கிள் பழுது நீக்கும் தொழில் செய்துவரும் நந்தகுமார், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
1972-ம் ஆண்டு முதல் கட்சியில் இருந்து வருகிறேன். முன்னர் 18-வது வார்டு செயலாளராக இருந்தேன். தற்போது 16-வது வார்டு செயலாளராக இருந்து வருகிறேன். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் சரியான தண்டனை வழங்கியுள்ளதை வரவேற்கிறேன். இதுவரை எந்த மேடையிலும் அவர் பேசியதை நான் பார்த்ததில்லை. ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்ததை மட்டுமே பார்த்துள்ளேன்.
கட்சியை யார் காப்பாற்றுகிறாரோ அவரிடம் ஆட்சி இருக்க வேண்டும். பன்னீர்செல்வத்தை பார்க்கும்போது உண்மையானவ ராக தெரிகிறார். அவருடைய அமை தியான தோற்றம், தொண்டர்களால் போற்றப்படுகிறது. அவரே முதல்வராக தொடர வேண்டும். மன்னார்குடி கும்பலிடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தங்கம்மாள் ஓடையைச் சேர்ந்த கிளைச் செயலாளர் கிருஷ்ணன் கூறும்போது, “தனியார் மலர் விற்பனையகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறேன். எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியபோது, சென்னையில் தாமரை கொடியை ஏற்றிவைத்தார். மறுநாளே, அக்கொடியை உடுமலையில் நான் ஏற்றி கட்சிக் கிளையை தொடங்கினேன்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் உண்மை தொண்ட னாக இருக்கிறேன். எம்ஜிஆர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதங் களும், அவர் வழங்கிய உறுப்பினர் அடையாள அட்டையையும் வைத்துள்ளேன். எம்ஜிஆர் உடுமலைக்கு வந்தபோது, எனது மகனுக்கு மணிவண்ணன் எனப் பெயர் சூட்டினார்.
எனது நிலையைப் பார்த்து, பூளவாடி என்ற ஊரில் சாராயக் கடை எடுத்து நடத்த அனுமதித்தார். அதை நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகு சிறிது நாளில் அமெரிக்கா சென்று திரும்பியவர் இறந்துவிட்டார்.
பஞ்சாலைத் தொழிற்சங்க நிர் வாகியாக இருந்தபோது, தொலை பேசி மூலமாக எம்ஜிஆருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை உடையாமல் பாதுகாக்க வேண்டும். சசிகலா வுக்கு நீதிமன்றம் அளித்துள்ள தண்டனையை வரவேற்கிறேன்.
மன்னார்குடி கும்பலிடம் கட்சி சிக்கிவிட்டால், தமிழகத்தையே விற்றுவிடக் கூடிய நிலை ஏற்படும். பன்னீர்செல்வம் எளிய குடும்பத் தில் இருந்து, இந்த நிலைக்கு வந்துள்ளார். அவர் ஏற்கெனவே 2 முறை முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம். எளிதில் அணுகக் கூடியவராகவும் உள்ளார்” என்றார்.
உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுகவின் முதல் தலைமுறை தொண்டர்களின் பலரது கருத்தும் இதுவாகவே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT