Published : 05 Jan 2016 07:45 PM
Last Updated : 05 Jan 2016 07:45 PM
சிறுபான்மை மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்க கடிதம் அனுப்பி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தெலுங்கு, கன்னடம், உருது உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 68 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 6873 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இவர்கள் தமிழ் தவிர, அவர்களது தாய்மொழியை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி, தமிழ் மொழி கட்டாயமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனால், 2006-ம் ஆண்டு 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ் தாய்மொழியாக கற்பிக்கப்பட்டது. இதனால் தமிழ் மொழி படிப்பதில் பிறமொழி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, தெலுங்கு அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், இருவார காலத்திற்குள் பிறமொழி படிக்கும் மாணவ, மாணவிகளின் கருத்துகளை, பள்ளிக்கல்வித் துறை பெற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி ஓசூர் கல்வி மாவட்டத்தில் பயிலும் 6873 மாணவ, மாணவிகளின் கருத்துகளை பள்ளிக்கல்வித்துறை பெற்றது.
இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிறமொழி படிக்கும் 3604 மாணவர்களுக்கு அனுப்பி உள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர்நீதிமன்ற மற்றும் உச்zசநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தமிழ் கட்டாயமாக்கும் சட்டம், 2006-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பகுதி 2-ல் ஆங்கில பாடத்தினையும், பகுதி 3-ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை சிறுபான்மை மொழியில் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது.
தமிழ் மொழிக்கற்றல் சட்டம் 2006-ன் படி, 2011-12-ல் 6-ம் வகுப்பில் தமிழ்பாடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மாணவர்களின் பெற்றோர் உரிய முறையில் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு விலக்கு கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.
தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள நிலையில், விலக்கு கோருவது ஏற்புடையாக இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு அனுப்பி உள்ள விளக்கக் கடிதம் நகல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT