Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்

கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட100 ஆட்டோக்கள் சென்னையில் இன்னும் 2 வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ‘மக்கள் ஆட்டோ’என்ற பெயரில் இயங்கவுள்ள இந்த ஆட்டோக்களில் ‘மகளிர் ஸ்பெஷல்’ சர்வீஸ்களும் இருக்கும்.

மக்கள் ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். மற்றும் இணைய தள வசதி கொண்ட ‘டேப்’(டேப்லட் கணினி), பில்லிங் மிஷின் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். ஜி.பி.எஸ். வசதி இருப்பதால் ஆட்டோ எங்கே இருக்கிறது என்பதை பிரத்யேகமான கணினி மூலம் கண்காணிக்க முடியும். மேலும், ‘டேப்’பில் ரகசிய கேமராவும் உள்ளது. ஆபத்து நேரத்தில், ‘டேப்’பில் உள்ள பேனிக் பட்டனை அழுத்தினால், ஆட்டோவில் என்ன நடக்கிறது என்பதை கேமரா படம் பிடித்து, மைய கணினிக்கு (சர்வர்) அனுப்பும். அதுமட்டுமின்றி, போலீஸுக்கும் தானாகவே அழைப்பு செல்லும்.

கிரெடிட் கார்டு

மக்கள் ஆட்டோவில் செல்லும்போது, கட்டணம் ரூ.50க்கு மேல் இருந்தால் அதை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியும் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு முறை உயரும்போதும், மைய கணினியில் அதற்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். அந்தக் கட்டணத்தின்படியே ஆட்டோ பில் வழங்கப்படும்.

பில் உள்ளிட்ட விவரங்களை ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழிலும் பெறலாம். 044-66777777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ‘மக்கள் ஆட்டோ’வை அழைக்கலாம். மேலும், ‘மக்கள் ஆட்டோ ஆப்’ என்ற பிரத்யேக அப்ளிகேஷனும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் போனில் அதை பதிவிறக்கம் செய்துகொண்டால், அருகில் உள்ள மக்கள் ஆட்டோவை அழைக்க முடியும்.

மகளிர் மட்டும்

இத்தகைய வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள 100 ஆட்டோக்களில், பெண்களுக்கென்று 25 ஆட்டோக்கள் ஒதுக்கப்படும். பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் இந்த ஆட்டோக்களில் பெண்கள் மட்டுமே ஏற்றிச் செல்லப்படுவர். ஆட்டோ ஓட்ட விருப்பம் தெரிவிக்கும் பெண்களுக்கு பயிற்சி அளித்து, ‘டேப்’ வசதியுடன் கூடிய ஆட்டோவும் வழங்கப்படும் என ‘மக்கள் ஆட்டோ’வின் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “சென்னையில் இந்த திட்டம் வெற்றி பெற்றால் மற்ற நகரங்களிலும் செயல்படுத்துவோம். ஆட்டோ தொழிலை நவீனமயமாக்கவும் பாதுகாப்பானதாக்கவும்தான் இந்த முயற்சி” என்றார்.

அண்ணா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டும் உஷா கூறுகை யில், “கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனது சொந்த ஆட்டோவில் தற்போது இந்த ‘டேப்’வசதியை பொருத்தி ‘மக்கள் ஆட்டோ’வாக ஓட்டப் போகிறேன். பெண்கள் மட்டுமே பயணிப்பார்கள் என்பதால் பாதுகாப்பாக இருக்கும். இப்போது 25 பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x