Published : 03 Dec 2013 12:41 PM
Last Updated : 03 Dec 2013 12:41 PM

தமிழகத்தில் 3% பேர் மாற்றுத் திறனாளிகள்

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்துக்கான கண்காட்சி நடத்தப்பட்டது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைத் தலைவர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) வி.கனகசபை கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் செயற்கை கை, கால்கள் மற்றும் வாத நோயில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் தயாரித்த ஆபரணங்கள் மற்றும் பல்வேறு விதமான சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி செவ்வாய்க்கிழமையிலும், வரும் 12 மற்றும் 13ம் தேதிகளிலும் திறந்து இருக்கும்.

இதுதொடர்பாக வி.கனகசபை கூறியதாவது: இந்த மருத்துவமனையில் வாதநோய்கள், சாலை மற்றும் ரயில் விபத்துகளில் சிக்குபவர்கள், சதை மற்றும் மூட்டு சம்மந்தமான வலிகள், மூட்டு தேய்மான நோய்கள், கை, கால்களை இழந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்த விலையில் செயற்கை கை, கால்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

தமிழக மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகள் 3 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் 1 சதவீதம் கண்பார்வையற்றோர். 0.6 சதவீதம் பேர் உடல் ஊனமுற்றோர். 0.2 சதவீதம் பேர் மனவளர்ச்சி குன்றியோர். 0.1 சதவீதம் பேர் காது கேளாதோர். 0.2 சதவீதம் பேர் பேச்சுத்திறனற்றோர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசின் உதவித்தொகை, கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு, பேருந்து மற்றும் ரயில் பயணச் சலுகை, ஆகிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. கடும் ஊனமுற்றவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x