Published : 30 Jun 2017 12:16 PM
Last Updated : 30 Jun 2017 12:16 PM
பல்வேறு பிரச்சினைகளால் கடும் நெருக்கடியை சந்தித்துவரும் குறுந்தொழில் நிறுவனங்கள், புதிய வரி விதிப்பு முறையால் கூடுதல் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
மோட்டார் பம்ப்செட், வாகனம், கிரைண்டர், ஜவுளி இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள், ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை தளவாடங்களுக்குத் தேவையான பாகங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் குறுந்தொழில் முறையில் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் சுமார் 10 லட்சம் குறுந்தொழில் நிறுவனங்களில், 50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 30 ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்களில், சுமார் 3.5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் கோவையில் பணிபுரிகின்றனர். இவர்களில் 90 சதவீதத்தினர், ‘ஜாப் ஒர்க்’ முறையில் பல்வேறு உதிரிப்பாகங்களைத் தயாரிக்கின்றனர்.
கோவையில் தயாரிக்கப்படும் உதிரிப்பாகங்கள் தரமானவையாக இருப்பதால், நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், பல்வேறு பிரச்சினைகளால் குறுந்தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் தலைவர் எஸ்.ரவிக்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, “குறுந்தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.7.5 முதல் ரூ.8 வரை வசூலிக்கிறார்கள். இதை ரூ.3.30-ஆக குறைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இதேபோல், குறுந்தொழில் மேம்பாட்டுக்கான கடன்களுக்கு 14 சதவீத வட்டி விகிதம், நவீனமயமாக்கலுக்கு உதவாதது, தனி தொழிற்பேட்டைகள் இல்லை உள்ளிட்ட பிரச்சினைகளால், பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் குறுந்தொழில்கள் தவிக்கின்றன.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு 18 சதவீத சேவை வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தற்போது ஜாப் ஆர்டர் செய்பவர்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. குறைந்த அளவில் பொருட்களை வாங்கி, உதிரிப்பாகங்களைத் தயாரிப்பவர்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்கள், பெரிய உற்பத்தியாளர்களிடம் மூலப்பொருட்களை பெற்று, அவற்றை உதிரிப்பாகங்களாக மாற்றி, மீண்டும் உற்பத்தியாளர்களிடமே வழங்கிவிடுகின்றன. இந்த ஜாப் ஆர்டர் முறையில் கொள்முதல், விற்பனை எதுவும் கிடையாது. 18 சதவீத சேவை வரி, உற்பத்தியாளர்களைப் பெரிதும் பாதிக்கும்.
மிகச் சிறிய நிறுவனங்களில் மாத சம்பளத்துக்கு கணக்காளர் அல்லது கம்ப்யூட்டர் ஆபரேட்டரை நியமிப்பது என்பது, அவர்களின் வருமானத்துக்கு ஏற்றதல்ல. பெரிய உற்பத்தியாளரே 18 சதவீத வரியை ஏற்பார் என்றாலும், அந்த வரித் தொகையை முதலில் குறுந்தொழில் உற்பத்தியாளர் செலுத்த வேண்டி இருக்கும்.
சுமார் 3 மாதங்களுக்குப் பின்னரே, அந்தத் தொகை பெரிய உற்பத்தியாளரிடமிருந்து கிடைக்கும்.
இந்த நடைமுறையும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பொருளாதாரச் சிக்கலை உருவாக்கும். மேலும், பெரிய நிறுவனங்களே மெல்ல, மெல்ல உதிரிப்பாகங்களை தயாரிக்கத் தொடங்கும். அப்போது, குறுந்தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயமும் உள்ளது.
புதிதாக குறுந்தொழில் முனைவோர் உருவாவதையும், தொழில் வளர்ச்சியையும் பாதிக்கும். எனவே, ஜி.எஸ்.டி. வரி விலக்கு உச்சவரம்பை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். அதற்கு மேல் வணிகம் செய்வோருக்கு 5 சதவீத வரி விதிக்கலாம். இதன்மூலமே குறுந்தொழில் நிறுவனங்களை நெருக்கடியில் இருந்து பாதுகாக்க முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT