Published : 16 Jun 2016 12:04 PM
Last Updated : 16 Jun 2016 12:04 PM
சுதந்திர போராட்டத் தியாகி வாஞ்சிநாதனின் நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், மணியாச்சி ரயில் நிலையத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார், சங்கரன் என்ற வாஞ்சிநாதன். சுதந்திர வேட்கையால் தான் ஆற்றி வந்த அரசு வேலையை விட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களமிறங்கினார் .
ஆஷ் படுகொலை
வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவர் கைது செய்து துன்புறுத்தியது, வாஞ்சிநாதனின் மனதை பாதித்தது. 1911 ஜூன் 17-ம் தேதி ஆஷ் துரை ரயிலில் சென்றபோது, மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றார் வாஞ்சிநாதன். பின்னர் ரயில் நிலைய கழிப்பறைக்குள் சென்று தன்னைத்தானே சுட்டு வாஞ்சிநாதன் உயிர்த் தியாகம் செய்தார்.
அடையாளங்கள் இல்லை
இச்சம்பவம் நடந்த மணியாச்சி ரயில் நிலையத்தில், அதனை நினைவு கூரும் வகையில் எந்தச் சுவடும் தற்போது இல்லை. காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் போராட்டத்தின் விளைவாக மணியாச்சி ரயில் நிலையம், `வாஞ்சி மணியாச்சி’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரயில்வே டிக்கெட்டில் கூட 2011 முதல் தான் வாஞ்சி மணியாச்சி என அச்சிடப்படுகிறது.
நினைவுச் சின்னம்
வாஞ்சிநாதனின் 105-வது நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கடம்பூர் செ.ராஜூ இருப்பதால், மணியாச்சியில் வாஞ்சிநாதனுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
2011 முதல் கோரிக்கை
எட்டயபுரம் பாரதி ஆய்வு மைய ரகுநாதன் நூலக செயலாளர் இளசை மணியன் கூறியதாவது:
மணியாச்சி ரயில் நிலையம் அருகே வாஞ்சிநாதனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு இருமுறை மனு அனுப்பினேன். எனது மனு,
மேல்நடவடிக்கைக்காக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பதில் வந்தது. செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநருக்கு கடிதம் எழுதினேன். பதில் இல்லை.
ரயில்வே துறை மவுனம்
இதேபோல் மணியாச்சி ரயில் நிலைய நடைமேடை அருகே வாஞ்சிநாதன் சிலை நிறுவி, அதற்கு அருகில் அவரது வாழ்க்கை குறிப்பை எழுதி வைக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் எழுதினேன். அந்த மனு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் மதுரை கோட்ட மேலாளருக்கு திரும்பி வந்தது. இதுவரை எந்த பதிலும் இல்லை.
கோரிக்கைகள் நிறைவேறுமா?
நாளை வாஞ்சிநாதன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கடம்பூர் செ.ராஜூ இருப்பதால், கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என நம்புகிறோம் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT