Published : 26 Jan 2017 10:18 AM
Last Updated : 26 Jan 2017 10:18 AM
ஜல்லிக்கட்டு போராட்டங்களால், மதுரை மாநகரில் 7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
மதுரையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி மாணவர்கள் கடந்த ஜன.16 முதல் போராட்டத்தை தொடங்கினர். தமுக்கத்தில் தினமும் பல ஆயிரம்பேர் திரண்டனர். இதனால் ஜன. 18-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. அடுத்தடுத்து, போராட்டம் வலுத்ததால் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டன. ஜன.23-ம் தேதி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும், 24-ம் தேதியன்றும் மாவட்டத்திலுள்ள கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாநகரில் உள்ள மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. நேற்றுதான் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘தேவர் ஜெயந்தி, முதல்வர் ஜெயலலிதா மறைவு போன்ற சில காரணங்களுக்காக அதிகபட்சம் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. டாஸ்மாக் வரலாற்றிலேயே முதல் முறையாக மதுரை மாநகரில் ஜன.18 முதல் 24-ம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடக்கும்போது, கடைகள் திறக்கப்பட்டால், வன்முறை நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆட்சியர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மது விற்பனையில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. மாநகரில் மட்டும் தினசரி மது விற்பனை ரூ. 1.50 கோடியை தாண்டும். கடை அடைப்பால் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பார் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப் பட்டனர். அதேநேரம் சட்டம், ஒழுங்குக்கு முக்கியத் துவம் அளிக்கும்போது டாஸ்மாக் விற்பனையை பெரிதாகக் கருதமுடியாது. 7 நாள் கடை அடைப்பால், மதுரையைச் சுற்றியுள்ள வெளி மாவட்ட மதுக்கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது. இன்று குடியரசு தினத்தன்றும் டாஸ்மாக்கிற்கு விடுமுறையே என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT