Last Updated : 09 Nov, 2014 09:14 AM

 

Published : 09 Nov 2014 09:14 AM
Last Updated : 09 Nov 2014 09:14 AM

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னது ஏன்? - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதால்தான் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னேன். அவர் குறுகிய வட்டத்துக்குள் அடைபடக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவ ராக பொறுப்பேற்றபின் முதல்முறை யாக டெல்லி சென்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அவர், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி அழைத்துப் பேசியுள்ளாரே, இதன் முக்கியத்துவம் என்ன?

சோனியா எங்களை அழைக்க வில்லை. நாங்கள்தான் டெல்லி சென்று அவரை சந்தித்துப் பேசினோம். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கி றோம் என்பதை காட்டுவதற்காக சென்றோம். தமிழகத்தில் காங்கி ரஸுக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடாது என்று உறுதி அளித் துள்ளோம். சோனியா எங்களுக்கு பெரிதாக எந்த அறிவுரையையும் வழங்கவில்லை. சோனியாவும் ராகுலும் அடிக்கடி தமிழகம் வந்து தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர். விரைவில் தமிழகம் வருவார்கள்.

ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றியுள்ளீர்கள். அப்போது இருந்ததைவிட இப்போது சவால்கள் அதிகம் என நினைக்கிறீர்களா?

எதிர்பார்த்ததைவிட இப்போது சவால்கள் அதிகமாக உள்ளன. தேர்தலின்போது எங்கள் மீது கோப மாக இருந்த மக்கள், காங்கிரஸ் கட்சி இப்படி ஆகிவிட்டதே என்று இப்போது வருத்தப்படுகின்றனர். அவர்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்க வேண்டும். இதை நோக்கியே எனது பணிகள் அமையும். முதல்கட்டமாக தலைவர்களை எல்லாம் ஒருங்கிணைத்துள்ளேன். அடுத்தகட்டமாக தொண்டர்களை ஒருங்கிணைப்பேன். இதற்காக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம், கோஷ்டி அரசியலில் சிக்கித் தவிப்பது, தலைவர்கள் சுயநலமாக மாறிவிட்டத்தானே காட்டுகிறது?

எல்லா கட்சியிலும் கோஷ்டி அரசியல் இருக்கிறது. ஜனநாயக அடிப்படையில் நடக்கின்ற திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் கோஷ்டி இருப்பது இயற்கைதான். எல்லோருக்கும் சுயமாக சிந்திக்கக்கூடிய திறமை இருக்கிறது. ஆனால், கட்சியை வளர்ப்பதில் எல்லா தலைவர்களும் ஒற்றுமையாக வருவதுதான் பெருமையான விஷயம். அந்த பெருமையை காங்கிரஸ் கட்சி இப்போது தமிழகத்தில் பெற்றுள்ளது.

ஜி.கே.வாசன் பக்கம் நிறைய இளைஞர்கள் இருப்பதாகவும், உங்களிடம் மூத்த தலைவர்களே அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறதே?

உண்மை நிலை என்ன என்பது உங்களைப் போன்ற பத்திரிகை யாளர்களுக்கு நன்றாகவே தெரியும். எங்கள் பக்கம் இளைஞர் இல்லை என்று எப்படி கூற முடியும்? இங்கு யாரும் தடியை ஊன்றிக் கொண்டு நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். மூத்த தலைவர்களும் உள்ளனர்.

பதவியேற்ற நாளிலேயே திராவிடக் கட்சிகளை விமர்சித்து பேசினீர்கள். 2016 தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான ராமதாஸ் போன்றவர்களை ஒருங்கிணைத்து கூட்டணி அமைப்பீர்களா?

இந்த விஷயங்கள் பற்றியெல் லாம் உங்களுக்கு போகப்போக புரியும். காங்கிரஸை வளர்ப்பதற் கான செயல் திட்டங்களை வெளிப் படையாக சொல்ல முடியாது.

ரஜினிகாந்த் பாஜக பக்கம் போய்விடுவார் என்பதால்தான், அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறீர்களா?

நிச்சயம் அந்த அடிப்படையில் சொல்லவில்லை. பெரியார், காம ராஜர் போன்றவர்களை அரசிய லுக்கு அப்பாற்பட்டு, மக்கள் அனைவரும் கொண்டாடுகின் றனர். இதேபோல் ரஜினிகாந்த் எல்லோருக்கும் பொதுவான நபர். அவரது ரசிகர்கள் எல்லா கட்சியிலுமே உள்ளனர். அடிப்படை யில் நல்ல மனிதரான ரஜினி, குறுகிய வட்டத்துக்குள் அடைபடக் கூடாது என்பதுதான் என் கருத்து. விரைவில் அவரை சந்திக்கவும் உள்ளேன்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 5 மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது. ஆனால், மக்கள் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் எந்தப் போராட்டமும் நடத்தவில்லையே?

மோடி அரசின் தவறுகளை காங்கிரஸ் சுட்டிக்காட்டிக் கொண்டேதான் இருக்கிறது. மோடியைப் பொறுத்தவரை அவர் ஒரு சர்வாதிகாரியாக உள்ளார். மாநில கட்சிகளை ஒழிப்பதற்கு எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x