Published : 25 Jul 2016 10:25 AM
Last Updated : 25 Jul 2016 10:25 AM
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் தேனி மாவட்டச் செயலாளராக இருந்து வரும் எல்.மூக்கையா அப்பொறுப்பிலி ருந்து விடுவிக்கப்படுகிறார். கட்சிப் பணிகள் செவ்வனே நடக்க அவருக்கு பதிலாக தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த எம்.ஜெயபால் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
நீக்கம் ஏன்?
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இ.புதுப்பட்டியை சேர்ந்தவர் எல்.மூக்கையா. இவர் 1989-ம் ஆண்டு முதன்முதலில் பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். 1993-ல் இவரை மாவட்ட பொறுப் பாளராக கட்சித் தலைமை நியமித் தது. 1996-ல் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். பின்னர், அதே ஆண்டில் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு நடந்த 4 சட்டப் பேரவைத் தேர்தலிலும் தோல்வி யடைந்தார். ஆனாலும் மாவட்டச் செயலாளர் பதவியில் தொடர்ந்தார். கம்பம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராமகிருஷ்ணனுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் தேனி மாவட்டத்தில் 4 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது. தோல்விக்கான காரணத்தை அறிய தலைமை நிர்வாகி மஸ்தானை கட்சித் தலைமை அனுப்பியது. மாவட்டச் செயலாளரை மாற்றினால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றியாவது பெற முடியும் என மஸ்தானிடம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூறியதாக தெரிகிறது. அதன்பேரிலேயே சுமார் 26 ஆண்டுகள் கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்த மூக்கையா, திடீரென மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், ‘‘தேனி மாவட்டத் தில் 1980-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. அதன்பின்னர் இப்போது தான் 4 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்டச் செயலாளர் தேர்தலில், மூக்கையாவை எதிர்த்து கம்பம் ராமகிருஷ்ணன் போட்டியிட்டார். இதில் மூக்கையா வெற்றி பெற்றார். இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இருவரும் நல்ல நண்பர்கள். தற்போது மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கம்பம் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், மூக்கையாவின் தீவிர ஆதரவாளர்தான்’’ என்றனர்.
தேர்தல் பணி செயலாளர்
திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக குத்தாலம் பி.கல்யாணம் நியமிக்கப்படுவதாக க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT