Published : 22 Mar 2015 10:31 AM
Last Updated : 22 Mar 2015 10:31 AM
ஓசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ் டூ வினாத்தாள் பகிர்ந்த விவ காரத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளதால், சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 5-ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கின. கடந்த 18-ம் தேதி நடந்த கணிதத் தேர்வின்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் வினாத் தாளை செல்போன் மூலம் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்-ல் சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவிய தாக புகார் எழுந்தது.
இது குறித்த புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, மகேந்திரன் உள்ளிட்ட 4 ஆசிரியர்களை கைது செய்து, ஊத்தங்கரை கிளைச்சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப் பையும் ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட ஓசூர் தனியார் பள்ளி, பொதுத் தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இடம் பிடித்து வருகிறது. இதனால் பெற்றோர் கூடுதல் நிதி கொடுத்து அப்பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால் மற்ற தனியார் பள்ளிகள் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் வெளியானது குறித்து விவரமறிந்த தனியார் பள்ளிகள் தான் பறக்கும்படை அலுவலர்களுக் குத் தகவல் தெரிவித்திருக்கலாம் என கூறப் படுகிறது.
சிபிசிஐடி விசாரணை
இதனிடையே வினாத்தாள் பகிர்ந்த சம்பவத்தை அடுத்து ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அறை கண்காணிப்பாளர்களையும் இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள், ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு அறைக்கு 2 ஆசிரியர்கள்
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 1,500 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். ஓசூர் கல்வி மாவட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர் வேதகண்தன்ராஜ் அளித்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த பட்டியலில் தற்போது புகார் கூறப்பட்ட தனியார் பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்கள் எவ்வாறு அறை கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விளக் கம் கேட்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விசாரணை அறிக் கையை கல்வித்துறைக்கு சமர்ப் பித்து கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.மேலும், புகாரில் சிக்கி யுள்ள தனியார் பள்ளியிலும், இதே நிர்வாகத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளியிலும் நியமிக்கப்பட்ட தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அப்பள்ளிகளில் தேர்வு களைக் கண்காணிக்க ஒரு அறைக்கு 2 ஆசிரியர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர், என்றார்.
ஆட்சியர் எச்சரிக்கை
தனியார் பள்ளி ஆசிரியர் கள் விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
தனியார் பள்ளியில் தேர்வு மையம்?
தமிழகத்தில் கடந்த சில ஆண்டு களாக நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங் களில் உள்ள சில தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரு கின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பிளஸ் டூ தேர்வில் நாமக் கல் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில், ஒரு மதிப்பெண் கேள்விக்கான விடையை அட்டை யில் எழுதி மாணவர்களுக்கு காட்டி முறைகேடு செய்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து அனைத்து அறை கண்காணிப்பாளர்களும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதேபோல கடந்த 2012-ம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி, வினாத்தாளை நகல் எடுத்து மாணவர்களுக்கு விநியோகம் செய்ததாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் பொது தேர்வின்போது தொடர்ந்து சர்ச்சை கள் ஏற்பட்டு வரும் நிலையில், தனியார் பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்க, தமிழக கல்வித்துறை அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என கல்வியாளர்களும், பெற்றோ ரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அரசு மற்றும் தனியார் பள்ளி களில் படிக்கும் மாணவர்கள் இரவு பகலாக படித்து தேர்வு எழுதி வரு கின்றனர். இந்நிலையில் சில குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி, பல்வேறு குறுக்கு வழிகளை நாடு கின்றன. இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளை படிக்கும் மாணவர்களிடம் முழுமை யான திறமையை எதிர்பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக கடுமையாக உழைத்து நேர்மையுடன் தேர்வு எழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதுபோன்ற மோசடிகளால் பெரும் ஏமாற்றத்தை அடைகின்றனர்” என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் பெற்றோர்.
வாட்ஸ்அப்பில் வெளியான பிளஸ் 1 வினாத்தாள்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 வினாத்தாள்கள் வாட்ஸ்அப்பில் வெளியானது. இதைத் தொடர்ந்து 24, 26-ம் தேதிகளில் நடைபெறவுள்ள தேர்வுக்கான வினாத்தாள்கள் மாற்றப்பட உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 இறுதித் தேர்வுகள் மார்ச் 11-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் ஆகிய தேர்வுகள் முடிவடைந்துள்ளன.
முந்தைய நாளே பிளஸ் 1 தேர்வுக்கான வினாத்தாள்கள் வாட்ஸ்அப்பில் வெளியாகின. இதனால், பிளஸ் 1 மாணவ, மாணவியர் தேர்வில் சிரமமின்றி பதில்கள் எழுதியுள்ளனர். வரும் செவ்வாய்க்கிழமை வேதியியல் தேர்வும், வியாழக்கிழமை உயிரியல் தேர்வும் நடைபெற உள்ளன.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு நேற்று கூறியதாவது: வாட்ஸ்அப்பில் பிளஸ் 1 வினாத்தாள்கள் வெளியானது குறித்து விசாரணை நடைபெறுகிறது. 24-ம் தேதி நடைபெற உள்ள பிளஸ் 1 வேதியியல், 26-ம் தேதி நடைபெற உள்ள உயிரியல் தேர்வுகளின் வினாத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளன என்றார்.
அழிக்கப்பட்ட செல்போன் பதிவுகளை மீட்கும் பணியில் போலீஸ் தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சிலர் கூறியதாவது: ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது சம்பவத்தில், 18-ம் தேதி தேர்வு அறையில் செல்போன் மூலம் ஆசிரியர்கள் வினாத்தாளை அனுப்பியபோது அவர்களை பறக்கும்படை அலுவலர்கள் பிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் விளக்கக் கடிதம் வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனர். அன்று இரவுதான் போலீஸில் புகார் அளித்தனர்.
அதன்பின்பு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பல்வேறு இடங்களில் தேடி மறுநாள் அதிகாலை அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், பிடிபட்ட ஆசிரியர்கள் தங்களது செல்போனிலிருந்த குறிப்பிட்ட மென்பொருளை அழித்துள்ளனர். தற்போது ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் அதனை மீட்டு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT