Published : 18 Mar 2014 08:45 PM
Last Updated : 18 Mar 2014 08:45 PM

தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட தயக்கம்: நட்பா? கட்சியா? தவிக்கும் திண்டுக்கல் காங்கிரஸ் எம்.பி

திண்டுக்கல் தொகுதியில் குடும்ப நண்பரும், ஒவ்வொரு தேர்தலிலும் தனது வெற்றிக்கு பாடுபட்டவருமான முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி ஆதரவுடன் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் “சிட்டிங்” எம்.பி. என்.எஸ்.வி. சித்தன் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் தொகுதியில், கடந்த அரை நூற்றாண்டாக என்.எஸ்.வி. சித்தனை தவிர்த்து, வேறு யாரையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சிந்தித்து பார்த்தது இல்லை. இந்த மக்களவை தேர்தலில், ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க., மற்றும் தே.மு.தி.க. கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதால், திண்டுக்கல் தொகுதியில் என்.எஸ்.வி., சித்தன் எம்.பி., வத்தலகுண்டை சொந்த ஊராகக் கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மற்றும் உள்ளூர் முக்கிய நிர்வாகிகள் போட்டியிட மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.

தற்போது, காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் “சீட்” கேட்ட முக்கிய நிர்வாகிகள் பின்வாங்கினர். இந்நிலையில், காங்கிரஸ் தலைமை, “சிட்டி” எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் கண்டிப்பாகக் களம் இறங்க வேண்டும். அல்லது தனது ஆதரவாளரை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதனால், திண்டுக்கல் தொகுதியில் வழக்கம்போல என்.எஸ்.வி. சித்தன் போட்டியிடுவார் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த முறை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஏற்படவில்லை.

திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சித் தலைமையிடம் சவால் விட்டு “சீட்” பெற்றுக் கொடுத்துள்ளார். அதனால், ஒவ்வொரு தேர்தலிலும் தனது வெற்றிக்காக பாடுபட்ட ஐ.பெரியசாமியின் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து, இந்த தேர்தலில் போட்டியிட என்.எஸ்.வி. சித்தன் தயங்குவதாகவும், நட்பா? கட்சியா? என்ற குழப்பத்தில் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

போட்டியிட தயார்: சித்தன் எம்.பி.

தி.மு.க.வினர் கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலிலும் என்.எஸ்.வி. சித்தனை, தி.மு.க., வேட்பாளராக நினைத்து அவரை வெற்றிபெற வைக்க ஐ.பெரியசாமி பாடுபடுவார். 2009-ம் ஆண்டு தேர்தலில், சித்தன் கடைசி நேரத்தில் தோற்று விடுவார் எனப் பரவலாக தகவல் பரவியது. அதிர்ச்சியடைந்த ஐ.பெரியசாமி, தி.மு.க.வினரிடம், “அவர் தோற்றால் நான் தோற்றமாதிரி' எனக் கூறி வீடு, வீடாகச் சென்று ஆதரவு திரட்டி சித்தனை வெற்றிபெற வைத்தார். ஐ.பெரியசாமியும், என்.எஸ்.வி. சித்தனும் அரசியலைக் கடந்து குடும்ப நண்பர்கள்.

அதனால், அவரை எதிர்த்து என்.எஸ்.வி. சித்தன், எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்.” என்றனர். இதுகுறித்து என்.எஸ்.வி. சித்தனிடம் கேட்டபோது, “கஷ்ட காலத்தில்தான், துணிச்சலுடன் கட்சிக்காக போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு என்று பாரம்பரிய செல்வாக்கு உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களுக்குத் தேவையான யாருமே செய்யாத எத்தனையோ திட்டங்களை ஆரவாரமில்லாமல் நிறைவேற்றி உள்ளேன். பிறகு எதற்கு, நான் போட்டியிட தயங்க வேண்டும். “சீட்” கிடைத்தால் கண்டிப்பாகப் போட்டியிடுவேன்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x