Published : 04 Jun 2017 12:19 PM
Last Updated : 04 Jun 2017 12:19 PM
ஆஞ்சியோகிராம், எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் போன்ற கதிரியக்க சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளின்போது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், கதிர் வீச்சு ஊடுருவலில் இருந்து தங்களை பாதுகாக்க சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பாதுகாப்புக் கவச ஆடையை மதுரை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் உருவாக்கியுள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளில் தினமும் 50 முதல் 75 அவசரமில்லா அறுவை சிகிச்சைகளும், 15 முதல் 30 அவசர அறுவை சிகிச்சைகளும், 40 முதல் 50 பிரசவங்களும் நடைபெறுகின்றன.
இந்த சிகிச்சைகளுக்கு முன்பாக நோயாளிகளுக்கு எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் பரிசோதனைகளும், அதன் பிறகு நோய்களின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு கதிரியக்க சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.
இந்த சிகிச்சைகளின்போது மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்கள், கதிர்வீச்சு ஊடுரு வாமல் இருக்க காரீயத்தால் தயாரிக்கப்பட்ட கோட் வடிவிலான பாதுகாப்பு கவச ஏப்ரான் ஆடையை (lead based radiation) அணிவர். இந்த ஆடைகள் எடை அதிகமாக இருப்பதால் முதுகுவலி, உடல்வலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால், பலர் இந்த ஆடைகளை அணியாமல் கதிர்வீச்சு தாக்குதல் அபாய த்திலேயே சிகிச்சை அளிப்பார்கள்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி கதிரியக்கத் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.செந்தில்குமார், எடை குறை வான சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பாதுகாப்பு கவச கோட் வடிவிலான ஆடையை (light weight non-lead based radiation) உருவாக்கியுள்ளார்.
கடந்த மே 6-ம் தேதி புனேயில் நடந்த கதிரியக்க இயற்பியலாளர் மாநாட்டில் மருத்துவ கமிட்டி, சிறந்த மருத்துவ கண்டுபிடிப்பாக இந்த பாதுகாப்பு கவச ஆடையை அங்கீகரித்து பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் கூறியதாவது:
கதிர்வீச்சி ஊடுருவ வாய்ப் புள்ள சிகிச்சைகள், பரிசோத னைகளின்போது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கட்டாயம் பாதுகாப்புக் கவச ஆடையை அணிய வேண்டும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ள ஒரு மணி நேரமாகும். ஒரு நாளைக்கு 5 நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொண்டால் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது எடை அதிகமான ஏப்ரான் பாதுகாப்பு கவச ஆடையை அணிந்திருக்க வேண்டும். தற்போது வரை காரீயத்தால் தயாரிக்கப்பட்ட எடை கூடுதலான ஆடைகளையே இந்தியா முழுவதும் பயன்படுத்துகின்றனர். இந்த ஆடைகளை பயன்படுத்த முடியாமல் தூக்கி வீசும்போது பிளாஸ்டிக், பாலிதீன் போன் றவற்றைபோல அழிக்க முடியாது. அதனால், இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.
தற்போது இதற்கு மாற்றாக உடல் வலி, முதுகுவலியை ஏற்படுத்தாத எடை குறைவான சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஆடையை உருவாக்கியுள்ளேன். இந்த ஆடையை பிஸ்மூத்(Bi) அன்டிமோனி(Sb), பாரியம் சல்பேட்(BaSO4) போன்ற காரீ யமில்லாத பொருட்களை கொண்டு உருவாக்கினேன்.
இந்த ஆடையின் அணு எண், தற்போது பயன்படுத்தப்படும் ஆடைகளின் அணு எண்ணை விட அதிகம். அதனால், இந்த ஆடை வழியாக கதிர்வீச்சு ஊடுருவ வாய்ப்பே இல்லை. இந்த ஆடையை சிகிச்சைகளின்போது பயன்படுத்தி உறுதி செய்துள்ளேன்.
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் இந்த ஆடையை ஆய்வு செய்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்த உகந்தது எனச் சான்று வழங்க வேண்டும். அதற்காக இந்த பாதுகாப்புக் கவச ஆடையை மும்பை அணு ஆராய்ச்சி மையத்துக்கு விரைவில் அனுப்ப உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவர் செந்தில்குமாரை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் எம்.ஆர். வைரமுத்துராஜூ பாராட்டினார்.
டீன் கூறுகையில், புனே மருத்துவ மாநாட்டில் இவரது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கொடுத்து விருது வழங்கி உள்ளனர். அடுத்தக்கட்டமாக மருத்துவ வல்லுநர் குழு ஆய்வு செய்து, இவரது கண்டுபிடிப்பை பயன்படுத்தலாம் என ஒப்புதல் வழங்கிய பிறகே பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் என்றார்.
இவரது முந்தைய கண்டுபிடிப்புகள்
நெஞ்சக நுரையீரல் புற்றுநோயை துல்லியமாக குணப்படுத்தக்கூடிய ரெஸ்பிரேட்டரி மானிட்டரிங் மூவ்மெண்ட் டிவைஸ் கருவி. புற்றுநோய் சிகிச்சையின்போது நோயாளி வேறு இடத்துக்கு நகர்ந்தால் தவறான இடத்தில் சிகிச்சை நடக்க வாய்ப்புள்ளது. இதை தடுத்து நிறுத்தும் ஆட்டோ மேட்டிக் பேசண்ட் மூவ்மெண்ட் மானிட்டரிங் டிவைஸ் கருவி. கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு துல்லியமாக சிகிச்சை அளிக்கக்கூடிய த்ரீடி பிரிண்டிங் டெக்னாலஜி கருவி ஆகியவற்றையும் பேராசிரியர் செந்தில்குமார் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT