Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

மதுரை, திருச்சியில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு: 901 காளைகள் பங்கேற்பு; 88 வீரர்கள் காயம்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றதால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து காளைகளும் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றன. மொத்தம் 548 காளைகளும், 585 வீரர்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 41 வீரர்கள் காயமடைந்தனர்.

அதேபோல் திருச்சி அருகே சூரியூர் ஜல்லிக்கட்டில் 353 காளைகள் பங்கேற்றனர். காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 47 பேர் காயமடைந்தனர்.

நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியதில் சிலருக்கு காயமேற்பட்டது. பார்வையாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் காவல் ஆய்வாளரின் மண்டை உடைந்தது.

ஜல்லிக்கட்டு கோலாகலம்

மதுரை பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பிராணிகள் நல பாதுகாப்பு வாரியத்தினரின் கண்காணிப்பு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க மொத்தம் 699 காளைகளும், சுமார் 600 வீரர்களும் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். ஆனால், 560 மாடுகள் மட்டுமே களத்துக்கு வந்திருந்தன. அதில் 12 மாடுகள் முறையாகப் பதிவு செய்யாதது, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மாடுபிடி வீரர்களிலும் வயது மற்றும் உடல் தகுதியில் தேர்வான 585 பேர் மட்டுமே களமிறங்க அனுமதிக்கப்பட்டனர்.

மாடுகளையும், அவற்றின் முந்தைய ‘ஆட்டத்தையும் பொருத்து அவற்றுக்கான பரிசுகளை விழா கமிட்டியினர் மைக்கில் அறிவித்தனர்.

விறுவிறுப்பு நிறைந்த களம்

தங்கக்காசு, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ் போன்ற பெரிய பரிசுகள் அறிவிக்கப்படும் போது, வீரர்கள் மிக ஆர்வமாக காளைகளை அடக்கப் பாய்ந்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். சில காளைகள் வீரர்களை தன் பக்கத்திலேயே வரவிடாமல் சுழன்று சுழன்று விரட்டின. மாடுகள் பிடிபட்டால் வீரர்களுக்கும், நின்று விளையாடினால் மாட்டின் உரிமையாளருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இந்த முறை 2 மணிக்குள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்பதால், நல்ல காளைகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. அதனால், விறுவிறுவென காளைகள் வாடிவாசலை விட்டு வெளியேறின. துப்பாக்கித் தோட்டா போல பாய்ந்த காளைகளை, சுமார் 50 வீரர்கள் எதற்கும் அஞ்சாமல் அடக்கினர்

நன்றாக மாடு பிடித்த வீரர்களில் 7 பேர் பலத்த காயமடைந்ததால், உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 34 பேர் லேசான காயமடைந்து, முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

திருச்சி சூரியூரில்…

திருச்சி சூரியூரில் காலை 10.20 மணிக்கு மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவர் அமல்ராஜ், ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார். மது அருந்தி வந்திருந்த சுமார் 45 மாடுபிடி வீரர்களை களத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

400 மாடுகள் முன்பதிவு செய்திருந்த போதிலும் 353 மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு களத்திற்கு வந்தன.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது சில மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை கழற்றாமல் விடப்பட்டதால், மாடுபிடி வீரர்கள் சிலர் கயிற்றில் சிக்கி காயமடைந்தனர். காளைகள் முட்டியதில் காட்டூரைச் சேர்ந்த சதீஷ் (33), இனாம் குளத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் (19) ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காயமடைந்த 45 மாடுபிடி வீரர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு திடலுக்கு வெளியே கூட்டமாக நின்றவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதில் சிலருக்கு காயமேற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் கோபமடைந்து கல்வீச்சில் ஈடுபட, மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் நடேசன் மண்டை உடைந்தது. அவர் அங்கிருந்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றார்.

போட்டிகளைப் பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் அடுக்கு மாடத்தின் ஒருபகுதியில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் ஏறியதால் சரிந்தது. காவல் துறையினர் அங்கிருந்த பார்வையாளர்களை அப்புறப்படுத்தி பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x