Published : 08 Oct 2013 10:40 AM
Last Updated : 08 Oct 2013 10:40 AM

தீவிரவாதிகளுக்குக் கட்டளையிடும் அமீர் யார்?

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அல் - உம்மா தீவிரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை வேலூரில் வைத்து விறு விறு விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது போலீஸ். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் தந்திருக்கும் தகவல்களே படுபயங்கரமாக இருப்பதாக விசாரணைக் குழுவில் இருக்கும் அதிகாரிகள் சொல்கிறார்கள்.

காவலில் எடுக்கப்பட்ட தீவிரவாதிகளி டம் 10 டி.எஸ்.பி-க்கள், 4 எஸ்.பி-க்கள் என மிகப்பெரிய போலீஸ் படையே விசாரித்துக் கொண்டிருக்கிறது. போலீஸ் பக்ருதீனைப் பொறுத்தவரை விசாரணை அதிகாரிகளுக்கு எந்த சிரமமும் கொடுக்கவில்லையாம். கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் தயக்கமில்லாமல் பதில் வந்து விழுந்ததாம்.

இதுகுறித்து விசாரணைக் குழுவில் உள்ள அதிகாரிகள் இருவரிடம் பேசி னோம். “போலீஸ் கையில் சிக்கும் வரை தான் போலீஸ் பக்ருதீன் பெரிய ஆளாய் இருப்பான். சிக்கிவிட்டால் பொட்டிப் பாம்பாக மாறிவிடுவான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆனால், இப்போது இவர்களை பிடித்திருக்கா விட்டால் தமிழகத்தில் பல பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கும் என்பது உண்மை. நாங்கள் ஒருசில வழக்குகளில் மட்டுமே இவர்களுக்கு சம்பந்தமிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், நாங்கள் நினைத்துப் பார்க்காத மேலும் சில வழக்குகளிலும் இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தீவிரவாதிகள் பதுங்கி இருந்த புத்தூர் வீட்டுக்குள் இருந்து, இந்துத்துவா தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் சம்பந்தமாக வந்த செய்திகளின் பத்திரிகை கட்டிங்குகள், அவர்கள் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினோம். இதுகுறித்து போலீஸ் பக்ருதீனிடம் விசாரித்தபோது, ‘இஸ்லாத் திற்கு எதிரானவர்களை மண்ணோடு மண்ணாக்குவதற்காக ஜிகாத் புனிதப் போரை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அமீர் (கூட்டத்தின் தலைவன்) எங்களுக்கு இட்டிருக்கும் கட்டளை. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

நாங்கள் குறிவைத்திருக்கும் இந்துத்துவா தலைவர்களின் படங்கள் தான் இவை. இந்து முன்னணி ராமகோபாலன், ஈரோட்டைச் சேர்ந்த இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் பூத்தப்பன், மதுரையைச் சேர்ந்த சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவர் தூதை செல்வம், பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் சுரேந்திரன், இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் இவர்கள்தான் எங்களின் ஹிட் லிஸ்டில் முன்னணியில் இருப்பவர்கள். இதில் சிலருக்கு நாங்கள் ஏற்கெனவே வைத்த குறி தப்பிவிட்டது. தூதை செல்வத்தை கொலை செய்வதற்காக நாங்கள் பிளான் போட்ட தினத்தில் அவன் எங்கள் கையில் சிக்கவில்லை.

அன்றைய தேதியில் யாராவது ஒரு இந்துத்துவா பிரமுகரின் கதையை முடித்து அமீருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று பிலால் மாலிக் துடித்தான். பால்கடை சுரேஷ் நாமத்தை போட்டுக்கிட்டு அடிக்கடி நம்ம ஏரியாவுக்குள்ள வந்து போயிகிட்டு இருக்கான். அதனால அவனை முடிச்சிடலாம்னு பிலால் தான் சொன்னான். அவன் சொல்லித்தான் பால் கடை சுரேஷை போட்டுத் தள்ளினோம். அன்றைக்கு தூதை செல்வத்தின் மீது எங்களுக்கு தீராத ஆத்திரம் அதனால்தான் வாழைத் தண்டை வெட்டுவதுபோல் சுரேஷை கண்மூடித்தனமாக (சுரேஷ் உடலில் மொத்தம் 48 வெட்டுக்கள்) வெட்டிச் சாய்த்தோம்’னு சொல்றாங்க.

அவர்கள் குறிப்பிடும் அமீர், அபுபக்கர் சித்திக்காக இருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், அவன் இல்லை என்கிறார்கள். ’அபுபக்கர் சித்திக்கை பொறுத்தவரை, போனில் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டார். எங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தால் ஆட்கள் மூலமாக தகவல் வரும் அவர்கள் சொல்லும் இடத்தில் போய் அவரைச் சந்தித்துவிட்டு வருவோம். அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்து முடிப்போம்’னு சொல்றான் பக்ருதீன்.

ஆனால், திரும்பத் திரும்பக் கேட்டாலும் அமீர் யார் என்பதை ரெண்டு பேருமே சொல்ல மறுக்குறாங்க. அவங்க போக்கிலேயே விட்டுத்தான் அந்த உண்மையைக் கறக்கணும்.

அதேசமயம், ’பெங்களூர், ஹைதராபாத் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உங்க ளுக்கு என்ன தொடர்பு’ன்னு கேட்டதுக்கு, அந்தச் சம்பவங்களில் எங்களிடம் சில உதவிகளை கேட்டார்கள் அதை மட்டும்தான் செய்து கொடுத்தோம்’னு போலீஸ் பக்ருதீன் சொல்றான். ஆந்திரா, கர்நாடகா போலீஸ் வந்து விசாரிச்சாத்தான் மற்ற உண்மைகள் தெரியவரும்’’ என்று சொன்னார்கள் அந்த அதிகாரிகள்.

இது சம்பந்தமாக சிவசேனா மாநிலத் தலைவரான தூதை செல்வம் மேலும் சில தகவல்களை நமக்குச் சொன்னார். ‘’மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அமெரிக்கன் மிஷன் சர்ச் தெருவில் என்னுடைய அலுவலகம் இயங்கி வந்தது. இதற்கு எதிரில்தான் செருப்புக்கடை சையதுவின் கடை. அத்வானி ரூட்டீல் குண்டு வைத்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்திருப்பவன். அந்த ஏரியாவுக்கு போலீஸ் பக்ருதீன் வந்து போனதை பலமுறை நான் போலீஸிக்கு தகவல் கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மாறாக தீவிரவாதிகளால் எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி என்னை கண்காணிக்க ஆரம்பித்தது போலீஸ். இத்தனைக்கும் காரணம் எனது அலுவலகம் இருந்த ஏரியாவைச் சேர்ந்த ஒருத்தன் தான்னு எனக்கு தகவல் கிடைச்சது. உடனே அவனோட கடைக்குள்ள போயி அவனை அடிக்கப் போயிட்டேன். அவன் பயந்துக்கிட்டு துணை கமிஷனர் திருநாவுகரசுக்கிட்ட போயி அழுதுருக்கான்.

உடனே, அவரு என்னைய கூப்பிட்டுவிட்டு சமாதானம் பேசுனாரு. ‘ஒரு மாசத்துக்கு முந்தியே உங்கள போட்டுத் தள்ள தென்காசியிலிருந்து ஆட்கள் வந்தாங்க. அவங்களை கையில காலில் விழுந்து நான்தான் அங்கிருந்து போக சொன்னேன்’னு அவன் சொன்னான். எனது அலுவலகத்தை அங்கேயிருந்து வேற இடத்துக்கு மாத்திட்டேன்.

இது தெரியாம என்னைய போட்டுத் தள்ள ஆட்களை கூட்டிக்கிட்டு வந்திருக்கான் போலீஸ் பக்ருதீன். நான் இல்லைன்னதும் சுரேந்திரனையும் சோலக்கண்ணனையும் தேடிப் போயிருக்காங்க. அவங்களும் இல்லைன்னதும், அப்பாவி ஆஞ்சநேயர் பக்தரான சுரேஷை கோடூரமா வெட்டிக் கொன்னுட்டுப் போயிருக்காங்க.

இந்தச் சம்பவத்துல ஈடுபட்ட சிலரை பிடிச்சப்பவே இந்தத் தகவல்களை எல்லாம் சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் தான் ஆகஸ்ட் 13 -ம் தேதியிலிருந்து எங்க மூணு பேருக்கும் ஆயுத போலீஸ் பாதுகாப்புக் குடுத்தாங்க. நான் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொன்னேன். ஆனா, ’நிலைமை சரியில்ல.. நீங்க கொஞ்சம் பாதுகாப்பா இருங்க. கூடிய சீக்கிரம் பக்ருதீனையும் அவன் கூட்டாளிகளையும் பிடிச்சிருவோம்’னு சொன்னாங்க. அதனால ஏத்துக்கிட்டேன்’’ என்று சொன்னார் தூதை செல்வம்.

விசாரணையின் வீரியம் கூடக்கூட இன்னும் பல அதிர வைக்கும் உண்மைகள் வெளிவரக் கூடும் என்று இப்போதைக்கு கமா போடுகிறது காவல்துறை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x