Published : 17 Feb 2014 06:12 PM
Last Updated : 17 Feb 2014 06:12 PM

வளர்ச்சிக்கு உதவாத மத்திய பட்ஜெட்: ஜெயலலிதா கருத்து

பொதுத் தேர்தலை மனதில் கொண்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட், நிலைத்தன்மைக்கோ வளர்ச்சிக்கோ உதவாது என்று முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "மிகுந்த அமளிக்கிடையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால இரு அரசுகளின் செயலற்ற நிர்வாகத்தைக் காட்டுகிறது.

பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, நாடாளுமன்றத்தில் நிதியமைச்சருக்கு பாதுகாப்பாக உறுப்பினர்கள் மனித கேடயமாக நின்றதில் இருந்தே, மத்திய அரசின் ஒட்டுமொத்த, நிர்வாகமற்ற தன்மையை எடுத்துக் காட்டியது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் இடைக்கால பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக மக்களுக்கு திருப்தியளிக்கும் எந்தவொரு அம்சமும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

நாட்டின் நிலைப்புத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் மத்திய பட்ஜெட் எந்த வகையிலும் உதவாது. பொருளாதார நிலைமையை சீரமைப்பதற்கான எந்த திட்டமும் மத்திய அரசின் பட்ஜெட்டில் இல்லை.

இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு உலக பொருளாதார நிலைமையே காரணம் என மத்திய நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் திறனற்ற செயல்பாடுகளில் இருந்து மத்திய அரசு தப்பிக்க இயலாது. மிகக்குறைந்த அளவே சேமிப்பும், முதலீடும் குறைந்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தாலும், கடந்த 2011-2012-ம் ஆண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி கணிசமாக குறைந்துவிட்டது.

முதலீடுகளை ஈர்ப்பதில் ஏற்பட்ட தோல்வி, திட்டங்களை முழுமையடையாமல் தடை செய்தது ஆகியவை காங்கிரஸ் கூட்டணி அரசின் திறமையற்ற பொருளாதார ஆளுமையைக் காட்டுகிறது. உற்பத்தி திறன் வெகுவாக குறைந்ததற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தொழிற்கொள்கைதான் காரணம்.

முக்கிய பிரிவுகளுக்கான மானியங்களை குறைத்து, பொதுமக்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது, சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்கியது, டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்கியது, சரக்கு ரயில் கட்டணத்தை உயர்த்தியது போன்றவற்றை சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் என குடிமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிதியமைச்சர் வலியுறுத்தி வருகிறார். இது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குழப்பமான சிந்தனையையும், தவறான கொள்கைகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும், நாட்டு மக்களிடமிருந்து மத்திய அரசு முற்றிலுமாக விலகிச் சென்றுவிட்டதை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில பொருட்களின் மீதான சுங்கவரி, வருகிற ஜூன் மாதம் 30-ம் தேதிவரை மட்டுமே அமலில் இருக்கும். சில தள்ளுபடி அறிவிப்புகளும் இதேபோல ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீடிக்கும் என்பதில் இருந்தே இது தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பது புரியும்.

குறுகிய காலம் மட்டுமே பதவியில் இருப்போம் என தெரிந்துள்ள சூழ்நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் இயற்கை எரிவாயுக்கான விலையை இந்திய அரசு உயர்த்தியுள்ளது.

அரிசிக்கு சேவை வரி விதித்துள்ள மத்திய நிதியமைச்சரின் செயல், தெளிவற்ற, சிந்தனையற்ற நடவடிக்கை. தற்போது இந்த சேவை வரியை நிதியமைச்சர் நீக்கிக்கொண்டதன் மூலம், இது உண்மையாகியிருக்கிறது. பிரதமருக்கு கடந்த 10-ம் தேதி நான் எழுதிய கடிதத்தில் அரிசிக்கான சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

தமிழக மக்களுக்கு திருப்தியளிக்கும் எந்தவொரு அம்சமும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. நாட்டின் நிலைப்புத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் மத்திய பட்ஜெட் எந்த வகையிலும் உதவாது.

பொருளாதார நிலைமையை சீரமைப்பதற்கான எந்த திட்டமும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. அதிர்ஷ்டவசமாக இது ஒரு இடைக்கால பட்ஜெட்தான். மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், புதிய அரசால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். முழு பட்ஜெட், நாட்டை உயர் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். கடந்த 10 ஆண்டு கால மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறுகளை திருத்தும் வகையில் முழு பட்ஜெட் அமையும்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x