Published : 18 Dec 2013 09:00 AM
Last Updated : 18 Dec 2013 09:00 AM
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை நடக்கிறது. இதில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி அமைப்பதிலும் தேர்தல் வியூகம் வகுப்பதிலும் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. திமுக பொதுக்குழுக் கூட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பேசிய கட்சித் தலைவர் கருணாநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தார். இதையடுத்து, திமுகவை காங்கிரஸார் விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.
இன்னொரு பக்கம் பா.ஜ.க. தலைமையில் பெரிய கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பாமக, மதிமுக, தேமுதிக கட்சிகளை இந்த அணியில் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது.
காங்கிரஸுடன் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி இல்லை என்ற நிலையில், தமிழகம் நான்கு முனைப் போட்டியை சந்திக்க தயாராகி வருகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கூடுகிறது. இதில் நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
நான்கு மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம், திமுகவின் அறிவிப்பு, பா.ஜ.க. கூட்டணி போன்ற விஷயங்கள் குறித்தும் பேசப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. பரிந்துரை கடிதம் வழங்க லஞ்சம் வாங்கியதாக 11 எம்.பி.க்கள் பற்றிய ரகசிய வீடியோ காட்சியை கோப்ராபோஸ்ட் என்ற இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது. இதில், அதிமுக எம்.பி.க்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், கே.சுகுமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த விவகாரத்தை வைத்து அதிமுகவினருக்கு ஜெயலலிதா கடும் எச்சரிக்கை விடுக்கக்கூடும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர், 19-ம் தேதி முதல் விருப்ப மனு தரலாம் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT