Last Updated : 26 Sep, 2016 01:12 PM

 

Published : 26 Sep 2016 01:12 PM
Last Updated : 26 Sep 2016 01:12 PM

விசேஷ நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளை ஆதரவற்றோருக்கு பகிர்ந்தளிக்கும் மதுரை விருந்து தன்னார்வலர்கள்

குடும்ப விசேஷ நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளை வாங்கிச் சென்று ஆதரவற்றோருக்கு பகிர்ந்த ளிக்கும் பணியில், மதுரை விருந்து என்ற தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமணம், காதணி விழா உள்ளிட்ட குடும்ப விழாக்களை நடத்துபவர்கள், பல லட்ச ரூபாய் செலவழித்து திருவிழா போல ஆடம்பரமாக நடத்தும் கலாச்சாரம் அதிகரித்து விட்டது. சாப்பாடு மீதமானாலும் பரவாயில்லை. பற்றாக்குறை மட்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் விழாக்களை நடத்துவோர் கவனமாக இருக்கின்றனர்.

இதுபோன்ற விருந்து, விசேஷ நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளை ‘மதுரை விருந்து’ என்ற தன்னார்வ அமைப்பினர் கூச்சப்படாமல் வாங்கிச் சென்று ஆதரவற்றவர்கள், உணவில்லாதவர்களுக்கு பகிர்ந் தளித்து வருகின்றனர்.

மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்த பல் மருத்துவர் உமர்ஷெரிப், இந்த அமைப்பைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். நான் பல விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோது ஏராளமான உணவு விரயமாவதைப் பார்த்து வேதனை அடைந்தேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தோன்றியது.

இதையடுத்து, பட்டினியில்லா தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்து, மதுரை விருந்து என்ற அமைப்பை தொடங்கினோம். நாம் ஒருவருக்கு செய்யும் உதவியானது தானமாக மட்டுமில்லாமல், நெருங்கியவர் களுக்கு வழங்குவதை போன்ற விருந்தாக இருக்க வேண்டும். மருத்து வர்கள், பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் இந்த அமைப்பில் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர்.

மதுரையில் உள்ள திருமண மண்டபங்களில் தொலைபேசி எண்களை கொடுத்துள்ளோம். விசே ஷம் முடிந்தபின்னர் உணவுகள் மீதமிருந்தால் மண்டபத்தில் இருந்து எங்களை தொடர்பு கொள்வார்கள். அந்த உணவுகளை வாங்கி சோதனை செய்வோம். அதன் பின்னர், அவற்றை பொட்டலங்களாக கட்டி ஆதரவற்றோர் விடுதிகள், சாலையோரங்களில் திரியும் ஆதரவற்றோர்களுக்கு உணவுப் பொட்டலங்களை பகிர்ந்தளிப்போம். தண்ணீரின் அவசியம், சிக்கனம் குறித்தும் பள்ளி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இந்த சேவையை பாராட்டிய சிலர், விசேஷம் முடிந்த பின் மீதமிருந்தால் உணவுகளைக் கொடுப்போம் என்ற நிலை மாறி, தற்போது பிறருக்கு வழங்குவதற்காகவே உணவுகளை கூடுதலாக சமைக்கின்றனர். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பாகவே, எங்களை அழைத்து உணவுகளை வழங்கி விடுகின்றனர். சமூகத்தில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x