Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM

திருமண விழாவில் பேனர் வைக்க கட்டுப்பாடு: காஞ்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

அரசியல் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட டிஜிட்டல் பேனர்களை திருமண விழாக்களில் வைத்தாலும் அது தேர்தல் விதிமீறாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன், அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்கான தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தலைமை வகித்தனர். இதில் ஆட்சியர் போசியதாவது:

அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டிஜிட்டல் பேனர்களை, திருமணம்உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் வைத்தாலும் கொடிகளைக் கட்டினாலும், தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகளின்படி, அது தேர்தல் விதிமீறல்தான். அவர்கள் மீது கட்டாயம் வழக்கு பதிய வேண்டும்.

மாவட்டம் முழுவதும் அரசியல் தலைவர்கள் இடம்பெற்ற டிஜிட்டல் பேனர்கள் வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, கட்சி வண்ணங்களை தீட்டுவது, கட்சிக் கொடிகளை பறக்க விடுவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மட்டும், தனி நபருக்கு சொந்தமான வீட்டின் சுவர்களில், வீட்டின் உரிமையாளர் அளித்த அனுமதி கடிதத்தின் அடிப்படையில் சுவரொட்டிகளை ஒட்டுவது, எழுதுவதை மேற்கொள்ளலாம்.

போலீஸார் யாரும், வீடு வீடாகச் சென்று, அனுமதி பெற்று தான், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டாம். தனி நபர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி, சுவரை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சம்மந்தப்பட்ட நபர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யலாம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x