Published : 23 Apr 2017 09:37 AM
Last Updated : 23 Apr 2017 09:37 AM

சூழலை பாதிக்கும் தெர்மாகோல் அட்டைகளை அணையில் மிதக்கவிடுவதா? - சுற்றுச்சூழல் வல்லுநர்கள் அதிருப்தி, அதிர்ச்சி

வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் அட்டைகளை போர்வை போல பயன்படுத்தும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுச் சூழலை பாதித்து, மண்ணுக்கும் மனித குலத்துக்கும் பல்வேறு கேடுகளை உருவாக்கக்கூடிய தெர்மாகோல் அட்டை களை நீர் பாதுகாப்புக்குப் பயன்படுத்தியது நிபுணர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் இருக்கும் வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு தலை மையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை தெர்மாகோல் அட்டை களைப் போர்த்தினர். சுமார் 300 தெர்மாகோல் அட்டைகளை ‘டேப்’களை வைத்து ஒட்டி அணையில் மிதக்கவிட்டனர்.

‘அணை முழுவதும் தெர்மாகோல் அட்டைகளைப் போட்டு தண்ணீரை மூடு வதாவது’ என்று நிபுணர்கள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை ஆரம்பத்தி லேயே இத்திட்டத்தை விமர்சித்தனர். அதற்கேற்றவாறு, அடுத்த சில நிமிடங் களிலேயே தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் காற்றில் பறந்துபோய்விட்டன.

‘‘இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த லாம் என்று யார் ஆலோசனை சொன்னது?’’ என்று பொதுப்பணித் துறை அதிகாரி களிடம் கேட்டதற்கு, ‘‘தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலேயே இதுபோல ஒரு திட்டம் செயல்படுத்தப் பட்டது இல்லை. வைகை அணையில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், மாநில அளவில் அதிகாரிகளை ஆலோசிக்காமல் அத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு சொல்லித்தான் செயல்படுத்தியதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. இப்போதைக்கு வைகை அணையின் செயற்பொறியாளர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்’’ என்றனர்.

இதற்கிடையில், ‘‘ஒரு நல்ல நோக்கத் துக்காக சோதனை முயற்சியாக மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது’’ என்று அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், எந்த சூழலிலும் தெர்மா கோலை பயன்படுத்துவது இயற்கைக்கு நல்லது அல்ல என்கின்றனர் சுற்றுச்சூழல் நிபுணர்கள். நீர்நிலைகளில் தண்ணீர் ஆவி யாவதைத் தடுக்க ரப்பர் பந்துகளை மிதக்கவிடுவது, ஆபத்து இல்லாத பாசி போன்ற தாவரங்களை வளரச் செய்வது, பிளாஸ்டிக் போர்வையால் மூடுவது போன்ற தொழில்நுட்பங்களை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன. அதேநேரம் சிறிய அளவிலான நீர்நிலைகளுக்கு மட்டுமே இவை பொருந்தும். பெரிய அணை களில் இதுபோன்ற திட்டங்கள் இது வரை செயல்படுத்தப்பட்டது இல்லை.

தமிழகத்தில் நீர்நிலைகளைக் காக்க வும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் வேறு வழிகளில் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அவற்றில் முக்கிய மானது, தரை கீழ் தடுப்பணை திட்டம் அல்லது நிலத்தடி தடுப்பணை திட்டம். இது ஆற்றுப்படுகைகளில் செயல்படுத்தப் படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கல் பாக்கம் அடுத்த பனங்காட்டுச்சேரியில் பாலாற்றில் கடந்த 2001-02-ம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆற்றுப்படுகையில் 20 அடி ஆழத்துக்கு 1.5 கி.மீ. நீளத்தில் நவீன பிளாஸ்டிக் அட்டைகளைக் கொண்டு தடுப்பணை கட்டப்பட்டது. இதற்கு ஏற்பட்ட செலவு ரூ.2.5 கோடி மட்டுமே. பிளாஸ்டிக் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதால் திட்டச் செலவு 10 மடங்கு குறைந்தது. பாலூர் அருகிலும் பாலாற்றில் பிளாஸ்டிக் நிலத்தடி தடுப்பணை கட்டப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு, வெட்டாறு, பாமணி ஆகிய ஆறுகளில் 5 இடங்களில் மற்றுமொரு பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் தடுப்பணைகள் கடந்த 2012-13-ல் கட்டப்பட்டன. ஆற்றுக்கு நடுவே சுமார் 20 அடி ஆழத்துக்கு பெரும் பள்ளங்கள் வெட்டப்பட்டு அதில் நீளமான பிளாஸ்டிக் விரிப்புகள் விரிக்கப்பட்டன. அதன் மீது 20 அடி ஆழத்துக்கு மணல் மூட்டைகளை அடுக்கி, எஞ்சியுள்ள அதே பிளாஸ்டிக் விரிப்பால் மூடி சீல் வைத்தனர். அதன் மீது ஆற்று மணல் கொட்டப்பட்டது.

மேற்கண்ட தொழில்நுட்பங்கள் மூலம் கோடைகாலத்தில் ஆற்றின் மேற்பரப்பில் ஓடும் தண்ணீரை ஆற்றுப்படுகை அதிகம் உறிஞ்சாது. பிளாஸ்டிக்கின் மேற்பரப்பில் ஓடுவதால் தண்ணீர் அவ்வளவாக ஆவியாகவும் மாறாது. அதேநேரம், ஆற்றுப்படுகையில் 20 அடி ஆழத்துக்கு கீழே ஓடும் நீரோட்டம் சற்றும் குறையாது. இதன்மூலம் நிலத்தடி நீர் பல மடங்கு செறிவூட்டப்படும்.

‘பாலிமரைசேஷன்’ என்ற வினைமூலம் உருவாக்கப்படும் ‘பாலிஸ்டைரீன்’தான் தெர்மாகோல் எனப்படுகிறது. இந்த உலகில், மண்ணில் மக்காத மற்றும் அழிக்க முடியாத கார்பன் காகிதம் உள்ளிட்ட சுமார் 20 பொருட்களில் இதுவும் ஒன்று. இது மண்ணை மலடாக்கும் தன்மை கொண்டது. இதன் துகள்கள் சுவாசக் குழாய்க்குள் சென்றாலோ, தெர்மாகோல் எரியும் புகையை சுவாசித்தாலோ கடுமையான உடல்நலக் கேடுகள் ஏற்படும். மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே, பள்ளிக் குழந்தைகள் தெர்மாகோல் அட்டையைப் பயன்படுத்தி செயல்முறை கல்விக்கான பணிகளை செய்ய சுற்றுச்சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்கின்றனர் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x