Last Updated : 15 Feb, 2017 11:59 AM

 

Published : 15 Feb 2017 11:59 AM
Last Updated : 15 Feb 2017 11:59 AM

புதிய விதிமுறைகளால் பட்டாசு தொழில் அழியும் அபாயம்: போராட்டத்தில் ஈடுபட உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் முடிவு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகளால் பட்டாசு தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்குத் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பட்டாசு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வா தாரம் பட்டாசுத் தொழில். சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார், சண்முகநாடார் ஆகியோர் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தொழிலை அறிந்துகொண்டு அதன் தொழில்நுட்பங்களைக் கற்றனர். 1927ல் சிவகாசி திரும்பிய அவர்கள் முதன்முதலில் நேஷ னல் தீப்பெட்டி ஆலையை தொடங்கினர்.

இம்மாவட்டத்தில் தற்போது மாவட்ட வருவாய் அலு வலரின் உரிமம்பெற்ற பட்டாசு ஆலைகள் 178ம், சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப் பாட்டுத்துறையின் அனுமதிபெற்ற பட்டாசு ஆலைகள் 152ம், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப் பாட்டுத்துறையின் அனுமதிபெற்ற 437 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 767 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன.

இந்த ஆலைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் நேரடியாகவும், உப தொழிலான காகித ஆலைகள், அச்சுத் தொழில் சார்ந்தோர், வாகனப் போக்குவரத்து, சுமைப்பணி தொழிலாளர்கள், வெடிபொருள் மருந்து மற்றும் ரசாயன உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சீனப்பட்டாசு அச்சுறுத்தலால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் குறைந்தது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் கடந்த ஆண்டு பட்டாசு தொழில் தப்பியது. ஆனால், சிவகாசி, திருச்சி, கரூரில் பட்டாசுக் கடைகளில் அடுத்தடுத்து நடந்த தீ விபத்துகளால் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, பட்டாசு கடைகளுக்கான பாது காப்பு விதிமுறைகள் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பட்டாசு கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறைக்கு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை புதிய விதி முறைகளை அறிவித்துள்ளது.

அதில் குறிப்பாக கடையின் அருகே 3 பக்கமும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கோயில்கள், ஏடிஎம்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் பட்டாசுக் கடை இருக்க வேண்டும், குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே பட்டாசு கடை இருக்க வேண்டும், பட்டாசுக் கடைக்கு மேல் மாடி இருக்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறுகையில், வழக்கமாக புதிதாக கொண்டுவரப்படும் விதிமுறைகள் அனைத்தும் புதிதாக பட்டாசுக் கடை தொடங்குவோருக்கு அமல்படுத்தப்படும். நிரந்தர பட்டாசுக் கடை உரிமம்பெற்று கடை நடத்தி வருவோருக்கு புதிய விதிமுறைகள் பொருந்தாது. ஆனால், தற்போது கொண்டு வந்துள்ள புதிய விதிமு றைகள் அனைத்து பட்டாசுக் கடைக்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனால் எந்த நகரிலும் பட்டாசுக் கடைகள் நடத்த முடியாது. ஊருக்கு வெளியே தனித்தனியாக கட்டிடம் கட்டியே கடை நடத்த முடியும். இது சாத்தியம் இல்லை என்பதால் நாட்டில் உள்ள 99 சதவீத கடைகள் மூடப்படும் சூழல் உள்ளது. விற்பனை இல் லாததால் உற்பத்தியும் முடக் கப்படும். இதனால், பட்டாசுத் தொழில் முற்றிலும் அழியும் சூழல் உள்ளது. எனவே, இப்புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிப்.17 முதல் நாட்டில் உள்ள அனைத்து பட்டாசுக் கடைகளையும், பட்டாசு ஆலைகளையும் குறிப்பிட்ட நாட்கள் மூடி எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x