Published : 15 Mar 2014 06:22 PM
Last Updated : 15 Mar 2014 06:22 PM

ஊழலை ஒழிக்க மோடியால் மட்டுமே முடியும்: ஆற்காடு பிரச்சாரத்தில் விஜயகாந்த் புகழாரம்

நாட்டில் ஊழலை ஒழிக்கும் ஒரே சக்தி நரேந்திர மோடிதான் என ஆற்காட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழ்ந்து பேசினார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா வல்லரசு நாடாக அனைவரும் விரும்புகின்றனர். ஊழலை ஒழிக்கும் ஒரே சக்தியான நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள். காசு வாங்கி கரண்ட் கொடுப்பதாக சொல்கிறார்கள். குஜராத்திலும் காசு வாங்கித்தான் கரண்ட் கொடுக்கிறார்கள். அங்கு 24 மணி நேரம் கரண்ட் கொடுக்கிறார்கள். இங்கு கரண்ட் இல்லை. நரேந்திர மோடிக்கு வாக்களித்தால் உங்கள் நம்பிக்கை தடைபடாது. தமிழகத்

தில் வறுமையை ஒழிப்பதாக கூறியவர்கள், அவர்கள் வறுமையை மட்டும் ஒழித்துக்கொண்டார்கள். எங்கு சென்றாலும் அமைதி, வளம், வளர்ச்சி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அமைதி என கூறுவது நீங்கள் அமைதியாக இருப்பது. வளம் என்பது பணம். வளர்ச்சி என்பது அவர்கள் வளர்ச்சி அடைவது.

எனக்கு வாக்களித்தால் தங்க தட்டில் தாலாட்டுவேன். அப்படி என்றால் தங்கத்தில் இல்லை. தங்கத்தைப்போல தாலாட்டுவேன். வாஜ்பாய் ஆட்சியில் இந்தியா முழுவதும் தங்க நாற்கர சாலை அமைத்தார்கள். டெல்லிக்கு நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது எனது வாகனம் தங்க நாற்கர சாலை வழியாகத்தான் வந்து சேர்ந்தது. ஆனால், இங்குள்ள சாலைகளில் பயணம் செய்தால் நமது பாக்கெட்டில் இருக்கும் செல்போன் பக்கத்தில் இருப்பவர்கள் பாக்கெட்டுக்கு சென்றுவிடும்.

விலைவாசி உயர்ந்துவிட்டதாக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை அதிகமாக்கிக் கொண்டார்கள். கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். ஆட்சிக்கு வந்தால் ரூ.2,500 கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் கொடுக்கவில்லை. மாத்தி ஓட்டு போடுங்க. பிறகு நாங்கள் எல்லாத்தையும் செஞ்சி தர்றோம்.

அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா பார்மசி என்கிறார்கள். ஏன் எம்ஜிஆர் பெயரில் தொடங்கவில்லை. தமிழகத்தில் இரண்டு கருநாகங்கள் இருக்கின்றன. பாம்பை கண்டால் படையும் நடுங்கும். இரண்டு பாம்புகளை கண்டால் நாம் ஓடித்தான் ஆகவேண்டும். நீங்கள் தீ மாதிரி வேலை செய்யணும். நான் 100 அடி பாய்ந்தால் நீங்கள் 200 அடி பாய வேண்டும். எல்லாரும் நரேந்திர மோடிக்கு ஓட்டு போடணும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x